நடிகை ஆன கபடி வீராங்கனை
சமீபத்தில் வெளியான “ஜஸ்டிஸ் பார் ஜெனி” திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தவர் கே.எஸ்.ஐஸ்வர்யா. நிறைய ஐஸ்வர்யாக்கள் சினிமாவில் இருப்பதால் குழப்பத்தை தவிர்க்க பெயருடன் இன்ஷியலையும் சேர்த்துள்ளார். தமிழக மாநில கபடி அணிக்காக விளையாடிய வீராங்கனையாக இருந்தவர். இந்த விளையாட்டு பின்னணியே அவரை சினிமாவிற்கும் கொண்டு வந்துள்ளது.
கோவிட் காலத்தில் கிடைத்த ஒரு குறும்பட வாய்ப்பு, அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது. அந்த அனுபவம், நடிப்பை ஒரு தொழிலாகத் தேர்ந்தெடுக்கத் தூண்டியது. தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளின் மூலம், இன்று அவர் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார். ஜஸ்டிஸ் பார் ஜெனியை தொடர்ந்து, நட்டி நட்ராஜ் ஜோடியாக நடித்து வருகிறார். இதோடு, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் உருவாகும் புதிய படங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளார்.
கபடியில் இருந்து சினிமாவிற்கு வந்தது குறித்து ஐஸ்வர்யா கூறும்போது கபடி வீராங்கனையாக இருந்தாலும் சிறு வயது முதலே நயன்தாராவின் தீவிர ரசிகை நான். அவர் தன் உழைப்பால் உயர்ந்ததை பார்த்து வளர்ந்தேன். நான் நடிக்க வந்த போது, ஆரம்பகால நயன்தாராவைப் போல இருக்கிறீர்கள் என்று பலரும் சொன்னது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவர் போல உழைத்து வளர வேண்டும் என்பதே என் ஆசை. புதுப்புது கதைகளோடு வரும் இளம் இயக்குநர்களின் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களைச் செய்ய வேண்டும்,” என்றார்.