துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன்
பாலிவுட்டில் கடந்த மாதம் ரன்வீர் சிங் நடிப்பில் துரந்தர் திரைப்படம் வெளியாகி இப்போது வரை 1200 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. சமீப காலமாகவே சோசியல் மீடியா முழுவதும் துரந்தர் படம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் ஆதித்யா தர் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே 2019ல் உரி : சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்கிற படத்தை இயக்கி அதற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் பெற்றவர்.
இந்த நிலையில் இவருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இயக்குனர் ஆதித்யா தர் முதன்முறையாக உதவி இயக்குனராக சேர்ந்து தொழில் கற்றுக் கொண்டது இயக்குனர் பிரியதர்ஷனிடம் தான். இயக்குனர் பிரியதர்ஷன் மலையாளம் தாண்டி அவ்வப்போது ஹிந்தியிலும் படங்களை தொடர்ந்து இயக்கி வருகிறார். அப்படி அவர் இயக்கும் போது அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தவர் தான் ஆதித்யா தர்.
அதன் பிறகு பிரியதர்ஷன் இயக்கிய ஆக்ரோஸ் மற்றும் தேஷ் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதும் அளவிற்கு முக்கியமான உதவி இயக்குனராக மாறினார். தற்போது துரந்தர் படத்தின் மூலம் இவருக்கு கிடைத்துள்ள வெற்றியை பார்த்து மகிழ்ந்துள்ள இயக்குனர் பிரியதர்ஷன், “என்னிடம் இருந்து நல்ல குணாதிசயங்களுடன் தன்னை வளர்த்துக் கொண்ட ஒருவர் பெறும் இப்படிப்பட்ட ஒரு அற்புதமான வெற்றியை பார்ப்பதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்கப்போகிறது. துரந்தர் படத்திற்காக என்னுடைய பாராட்டுக்கள் மற்றும் துரந்தர் 2 படத்திற்காக எனது வாழ்த்துக்கள் ஆதித்யா தர்..” என்று பாராட்டியுள்ளார்.
தனது குருவின் இந்த பாராட்டுக்களால் நெகிழ்ந்து போன ஆதித்யா தர் அவருக்கு அளித்துள்ள பதிலில், “என்னுடைய அன்பு பிரியன் சார்.. நான் என்னுடைய கைகளில் வெறும் சில பேப்பர்களுடனும் கொஞ்சம் நம்பிக்கையுடனும் உங்களிடம் எதுவுமே இல்லாத ஒரு ஆளாக வந்து நின்றபோது என்னை முழுவதுமாக நம்பினீர்கள்.. எதை செய்யக்கூடாது என்ற சினிமா உலகம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் எதை சரியாக செய்ய வேண்டும் என்று நீங்கள் தான் கற்றுக் கொடுத்தீர்கள். என்னுடைய திரையுலக பயணத்தில் ஒவ்வொரு அடியையும் உங்கள் பாதங்களை பின்பற்றியே எடுத்து வைத்து நகர்ந்துள்ளேன். எப்பொழுதுமே முதலில் நான் உங்களது மாணவன் தான். என்னுடைய இந்த வெற்றி உங்களுடைய வெற்றியை போல” என்று கூறியுள்ளார்.