சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்'
தமிழில் 'பூ, மரியான், சென்னையில் ஒருநாள், தங்கலான்' படங்களில் நடித்த நடிகை பார்வதி திருவோத், மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள், படப்பிடிப்பு தளத்தில் நடந்த அசவுகரியங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
பார்வதி கூறியதாவது:
சிறுவயதில் ஒருமுறை பெற்றோருடன் ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது, திடீரென யாரோ ஒருவர் என் நெஞ்சில் கைவைத்து அடித்துவிட்டு ஓடினார். அது சாதாரணமாக தொடுவது போல் இல்லாமல், அடித்தது போல வலித்தது. சின்ன வயது என்பதால் என்ன நடந்தது என்றே எனக்கு புரியவில்லை. ஆனால், பயமும், அதிர்ச்சியும், மன வலியும் அதிகமாக இருந்தது.
சாலையில் நடந்து செல்லும்போது எப்போதும் ஆண்களின் கைகளை கவனிக்க வேண்டும் என்றும், எல்லா நேரங்களிலும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் என் அம்மா எச்சரிக்கையுடன் அறிவுறுத்துவார். ஒரு தாய், தனது மகளுக்கு சுதந்திரமாக கனவு காண்பது எப்படி என்று கற்றுக்கொடுக்காமல், பாதுகாப்பாக இருப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்கும் நிலை இருக்கிறது.
டைட்டானிக் படம்
பாலியல் பற்றிய எனது முதல் புரிதல் 'டைட்டானிக்' திரைப்படத்திலிருந்துதான் வந்தது. படத்தில் வரும் ஜாக் மற்றும் ரோஸ் படம் போட்ட ஒரு ஊதா நிற டைட்டானிக் டி-ஷர்ட் என்னிடம் இருந்தது. எனக்கு ஜாக்கை மிகவும் பிடித்திருந்தது. அந்த நேரத்தில், 'முத்தம்' என்றால் என்னவென்றுகூட எனக்குத் தெரியாது. தூங்குவதற்கு முன், நான் அந்த டி-ஷர்ட்டை முத்தமிடுவேன்.
எனது அக்கா, தங்கை, அத்தைகளுடன் அந்த படத்தை பார்த்தபோது, முத்தக்காட்சி வரும்போது, அவர்கள் திரும்பி என்னை பார்ப்பார்கள். இதுபோன்ற விஷயங்களை என் சொந்த வாழ்க்கையில் இருந்துதான் கற்றுக்கொண்டேன். அவற்றில் பெரும்பாலும் வேதனையான அனுபவங்கள்.
துரதிர்ஷ்டவசமாக, ஏறக்குறைய ஒவ்வொரு பெண்ணுக்கும் நடக்கும் ஒரு பொதுவான விஷயம் இது. நாம் பிறக்கிறோம், வளர்கிறோம், பிறகு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறோம். எல்லாப் பெண்களும் இதுபோன்ற அனுபவங்களைச் சந்திக்கிறார்களா என்று கேட்டால், ஆம் என்று தான் பதில் வரும்.
சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்கள் பற்றி அவர்களுக்கு என்ன நடக்கிறது, என்ன செய்கிறார்கள் என்று கூட தெரியாது. ஆனால் அவர்களே 16, 18 வயதை அடையும்போது யோசித்து பார்த்தால், அந்த தருணங்கள் தங்கள் உடலையும், மனதையும் எவ்வளவு ஆழமாக புண்படுத்தின என்பதை உணர்வார்கள்.
லிப்ட்
எனக்கு 19, 20 வயது இருக்கும்போது, லிப்டில் சென்றுக்கொண்டிருந்தேன். என் பின்னால் நின்றிருந்த ஒருவன், என் மீது சாய்ந்து அழுத்த முயன்றான். அவனது சீண்டலை என்னால் உணர முடிந்தது. லிப்டில் இருந்து வெளியே வந்ததும், 'என்ன செய்தாய் நீ' என கேட்டு அவனை அறைந்தேன். பாதுகாப்பு ஊழியர்கள், போலீசார் வந்தனர். சிசிடிவி கேமராவும் இல்லை. அப்போது போலீசாரே, 'நீங்களே அவனை அடித்துவிட்டீர்களே, இனி அதை விட்டுவிடுங்கள்' எனக் கூறினர். அப்போதுதான் இந்த நாட்டில் நீதி என்றால் என்ன என்று புரிந்துகொண்டேன். நான் அடித்ததற்காக மக்கள் என்னை பாராட்டியபோது, அது ஒரு வெற்றியாக தோன்றவில்லை. ஆண்களே, தயவு செய்து கேளுங்கள். நீங்கள் உங்கள் தோள்களை உயர்த்தி நம்பிக்கையுடன் நடக்கிறீர்கள். ஆனால், பெண்களின் நிலையை உங்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
மரியான்
பரத் பாலா இயக்கத்தில் தனுஷ் உடன் நடித்த 'மரியான்' படப்பிடிப்பில் நடந்த அசவுகரியம் குறித்து பார்வதி கூறுகையில், ''மரியான் படத்தின் ஒரு காட்சியில் தண்ணீரில் முழுவதுமாக நனைந்தபடி நடித்தேன். அது கதாநாயகனுடன் வரும் காதல் காட்சி. அப்போது மாற்றுவதற்கு நான் உடைகள் கொண்டு வரவில்லை. என் தேவைகளைக் கவனித்துக்கொள்ள அங்கும் யாரும் இல்லை. ஒரு கட்டத்தில், உடை மாற்றுவதற்காக நான் என் ஓட்டல் அறைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்ல வேண்டியிருந்தது. அதற்கும் அவர்கள் அனுமதிக்கவில்லை.
எனக்கு 'பீரியட்'; நான் கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என சத்தமாகச் சொன்னேன். அந்த சமயத்தில் படப்பிடிப்புத் தளத்தில், என்னைச் சேர்த்து மொத்தம் 3 பெண்கள் மட்டுமே பணிபுரிந்தனர். அது எனக்கு கடினமாக இருந்தது, எனக்கு ஆதரவாக அங்கு யாருமில்லை'' என்றார்.