ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்
வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛ஜனநாயகன்'. அனிருத் இசையமைத்துள்ளார். இந்தபடம் கடந்தவாரம் ஜன., 9ம் தேதியே வெளியாக வேண்டியது. தணிக்கை பிரச்னை, அதனைத்தொடர்ந்து பட நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது என இப்படம் சிக்கல்களை சந்தித்ததால் படம் இதுவரை வெளியாகவில்லை. ஜன., 21ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது கோர்ட் சாதகமான தீர்ப்பு அளிக்கும் பட்சத்தில் ஜன., 23ம் தேதி படம் வெளியாக வாய்ப்புள்ளது.
இதனிடையே தணிக்கை வாரியத்தின் வழக்கை எதிர்த்து விஜய் படக்குழு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தணிக்கை வாரியத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஜனநாயகன் படம் தொடர்பாக தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜனநாயகன் படத்திற்கு சிக்கல் மேல் சிக்கல் எழுந்துள்ளது.
இதுஒருபுறம் இருக்க கரூர் சம்பவம் தொடர்பாக டில்லியில் சிபிஐ., விசாரணையில் இன்று(ஜன., 12) ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார் விஜய். தொடர்ந்து நாளையும் அவர் விசாரிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.