உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிரஞ்சீவி படத்தின் ரேட்டிங்கிற்கு தடை : விஜய் தேவரகொண்டாவின் வருத்தமும், சந்தோஷமும்

சிரஞ்சீவி படத்தின் ரேட்டிங்கிற்கு தடை : விஜய் தேவரகொண்டாவின் வருத்தமும், சந்தோஷமும்

சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ள மன சங்கர வர பிரசாத் காரு திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. அனில் ரவிபுடி இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் ஓரளவு வரவேற்பும் அதேசமயம் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கான டிக்கெட் புக்கிங் செய்யும் ஆன்லைன் இணையதளத்தில் இந்த படம் குறித்த ரேட்டிங் கொடுப்பதை தடை செய்யும் விதமாக தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்று இதற்கான தடையை வாங்கி உள்ளது. இதன் மூலம் படம் குறித்து வேண்டுமென்றே எதிர்மறையாக கருத்துக்களை பரப்புவதற்கு செக் வைத்துள்ளது தயாரிப்பு நிறுவனம். திரையுலகை சேர்ந்த பலரும் இதை வரவேற்றுள்ளார்கள்.

இது குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா கூறும்போது, “இதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியும் வருத்தமும் ஒருசேர தோன்றுகிறது. இப்படிப்பட்ட கடின உழைப்புக்கும் பணத்தைக் கொட்டி உருவாக்கப்பட்ட கனவுகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் விதமாக இந்த முயற்சியை மேற்கொண்டதற்காக ஒரு பக்கம் மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதேசமயம் நம் மக்களே இது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறார்களே வாழு வாழ விடு என்பது என்ன ஆனது ? நாம் எல்லாம் ஒன்றாக உயர வேண்டாமா ? என்கிற வருத்தமும் ஏற்படுகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் டியர் காம்ரேட் படத்தின் போது தானும் இது போன்ற பிரச்னையை சந்தித்ததாகவும் அதே சமயம் பலர் நல்ல படம் என்றால் எப்படி இருந்தாலும் ஓடிவிடும் என்று சொன்னாலும் கூட தனது அடுத்தடுத்த படங்களுக்கும் இதுபோன்று எதிர்மறை விமர்சனங்கள் பரப்பப்பட்ட போது தான் இதன் வீரியத்தை உணர்ந்ததாகவும் கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !