35 ஆண்டுகளுக்கு பிறகும் ஹிட்டான 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி'
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, ஷோபனா நடித்த 'தளபதி' படத்தில் இடம் பெற்ற பாடல் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி'. இளையராஜா இசையில் வாலி வரிகளில் எஸ்.பி.பி, ஜானகி பாடியிருந்தனர். இந்த பாடல் 35 ஆண்டுகளுக்குபின் மீண்டும் பேசப்படுகிறது, பலரால் பாடப்படுகிறது இங்கே அல்ல தெலுங்கு சினிமாவில்.
காரணம், சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தில் இந்த பாடல் முக்கியமான சீன்களில் வருகிறது. சிரஞ்சீவியும் நயன்தாராவும் காதலிக்கும்போது அவர்களை சேர்த்து வைக்கும் பாடலாக தெலுங்கில் மட்டுமல்ல, தமிழ், மலையாளத்திலும் ஒலிக்கிறது. ஆந்திராவில், தமிழகத்தில், கேரளாவில் ஒரு திருமண வீட்டில் அவர்கள் சந்திக்கும்போது இந்த பாடல் ஒலிக்கிறது.
தவிர, இன்னும் சில இடங்களிலும், குறிப்பாக, பிரிந்து இருந்த சிரஞ்சீவி, நயன்தாரா சேரும்போதும் கிளைமாக்சிலும் இந்த பாடல் ஒலிக்கிறது. முறைப்படி அனுமதி வாங்கி இந்த பாடலை பயன்படுத்தி இருப்பதாக இயக்குனர் அனில் கூறியிருக்கிறார். படத்துக்கு பீம்ஸ் சிசரோலியா இசையமைத்து இருக்கிறார்.
கடந்த ஆண்டு தமிழில் வெற்றி பெற்ற 'டியூட்' படத்தில் இளையராஜாவின் 'கருத்த மச்சான்' பாடல் இடம் பெற்றது. 'குட் பேட் அக்லி' படத்தில் 'என் ஜோடி மஞ்ச குருவி, ஒத்த ரூபாய் தாரேன்' பாடல்கள் பயன்படுத்தப்பட்டன. பின்னர், அந்த பாடல்கள் ரீல்ஸ்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' இடம் பிடித்துள்ளது. இளையராஜாவின் பழைய பாடல்களை பயன்படுத்தினால் அந்த படம் ஹிட்டாகும் என்ற சென்டிமென்ட் காரணமாக, சமீபகால படங்களில் அவர் பாடல் பயன்படுத்தப்படுகிறது. அவரிடம் முறைப்படி அனுமதி வாங்காதபோது அது சர்ச்சையாகிறது என்கிறார்கள் இளையராஜா ரசிகர்கள்.