உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: மறைந்த மலையாள நடிகர் ஜெயனை நினைவு கூறும் ஒரே தமிழ் திரைப்படம் “பூட்டாத பூட்டுக்கள்”

பிளாஷ்பேக்: மறைந்த மலையாள நடிகர் ஜெயனை நினைவு கூறும் ஒரே தமிழ் திரைப்படம் “பூட்டாத பூட்டுக்கள்”


எம் ஜி ஆர், சிவாஜி என்ற இரு பெரும் நாயகர்கள் கோலோச்சியிருந்த 1950 மற்றும் 60களில், பிற மொழி திரைப்படங்களின் முன்னணி நாயகர்களாக வலம் வந்து கொண்டிருந்த என் டி ராமாராவ், ஏ நாகேஸ்வரராவ், பிரேம் நஸீர், கல்யாண் குமார் போன்றோர் தமிழ் திரையுலகிலும் தடம் பதித்து, பல தரமான நல்ல திரைப்படங்களில் நடித்து வந்ததுபோல், 1980ன் ஆரம்பத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமான மலையாள திரையுலகின் ஆக்ஷன் ஹீரோதான் நடிகர் ஜெயன்.

“முள்ளும் மலரும்”, “உதிரிப் பூக்கள்” என்ற இரண்டு திரைக்காவியங்களைத் தந்த இயக்குநர் மகேந்திரனின் கைவண்ணத்தில் உருவான அவரது மூன்றாவது படைப்பாக வந்த “பூட்டாத பூட்டுக்கள்” திரைப்படம்தான் நடிகர் ஜெயனின் அறிமுகத் தமிழ் திரைப்படம். பொன்னீலன் என்ற எழுத்தாளரின் “உறவுகள்” என்ற நாவல்தான் “பூட்டாத பூட்டுக்கள்” என திரைவடிவம் பெற்றிருந்தது.

ஆரம்பத்தில் இத்திரைப்படத்தின் நாயகன், நாயகியாக, இயக்குநர் மகேந்திரனின் தேர்வாக இருந்தவர்கள் இந்தி நடிகர் நசீருதின் ஷாவும், நடிகை ஸ்மிதா பாட்டிலும்தான். பின்னர் திரைக்கதாசிரியரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் படத்தின் நாயகனாக தேர்வு செய்யப்பட்டவர்தான் நடிகர் ஜெயன். அன்றைய மலையாளத் திரையுலகின் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக வெற்றித் திரைப்படங்களைத் தந்து கொண்டிருந்த இவர், இத்திரைப்படத்தில் முற்றிலும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

அடிப்படையில் ஒரு இந்திய கப்பல் படை அதிகாரியாக பணியாற்றிய நடிகர் ஜெயன், மலையாளத் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக, துணிச்சல் மிகு முன்னணி நாயகனாக அதிரடி ஆக்ஷன் திரைப்படங்களைத் தந்து, ஒரு தனித்துவமிக்க திரைக்கலைஞனாக அசுர வளர்ச்சி பெற்று வந்த நிலையில், சென்னையிலுள்ள சோழவரத்தில் “கோளிலக்கம்” என்ற மலையாளத் திரைப்படத்தின் உச்சகட்ட சண்டைக் காட்சிக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த வேளையில், பறக்கும் ஹெலிகாப்டரில் படத்தின் நாயகன் தொங்கியபடி வருவதுபோல் எடுக்கப்பட இருந்த ஒரு குறிப்பிட்ட காட்சியில், டூப் போடாமல் தானே நடிப்பதாகக் கூறி, நடித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக நடிகர் ஜெயன் தவறி கீழே விழுந்து விபத்துள்ளாகி 41 வயதிலேயே மரணத்தை தழுவினார்.

தமிழில் இவரது அறிமுக திரைப்படமான “பூட்டாத பூட்டுக்கள்” வெளிவந்து சரியாக ஆறு மாதங்களிலேயே நடந்த இந்த எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்த நடிகர் ஜெயன், இக்கலையுலக வாழ்வு மட்டுமின்றி இப்பூவுலக வாழ்விலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டது தென்னிந்திய திரையுலகிற்கே ஒரு பேரிழப்பு என்பதை யாரும் மறுக்க இயலாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !