மங்காத்தா, தெறி: ரீரிலீஸ் டிரைலர் மோதல்
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையில், அஜித், அர்ஜுன், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் 2011ல் வெளியான படம் 'மங்காத்தா'. அஜித்தின் சினிமா பட்டியலில் திருப்புமுனையைத் தந்த முக்கிய படமாக அமைந்தது. அப்படத்தை இந்த வாரம் ஜனவரி 23ம் தேதி ரீரிலீஸ் செய்கிறார்கள். அதற்கான புதிய டிரைலர் சில நாட்களுக்கு முன்பு யு டியுப் தளத்தில் வெளியானது. அது தற்போது 7 லட்சத்திற்கும் கூடுதலான பார்வைகளைப் பெற்றுள்ளது.
அட்லி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், விஜய், சமந்தா, எமி ஜக்சன் மற்றும் பலர் நடிப்பில் 2016ல் வெளியான படம் 'தெறி'. விஜய்யின் அதிரடி ஆக்ஷன் படங்களில் ஒன்றாக அமைந்தது. அப்படத்தையும் இந்த வாரம் ஜனவரி 23ம் தேதி வெளியிடுவதாக அறிவித்து, அதற்காக ரீரிலீஸ் டீசர் ஒன்றையும் நேற்று வெளியிட்டார்கள். அது தற்போது 4 லட்சம் பார்வைகளை யு டியுப் தளத்தில் கடந்துள்ளது. இருந்தாலும் படத்தின் வெளியீட்டை மீண்டும் தள்ளி வைத்துள்ளார்கள். அடுத்த தேதி விரைவில் அறிவிக்கப்படலாம்.
இருந்தாலும் யு டியூப் தளத்தில் எந்தப் படத்தின் வீடியோ அதிகப் பார்வைகளைப் பெறப் போகிறது என்பதில் இருவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் ஒரு மோதலை உருவாக்கி வருகிறார்கள்.
யு டியூப் தளத்தில், தமிழ்ப் படங்களின் டிரைலர் டிரென்டிங்கில் 'தெறி' ரிரிலீஸ் டீசர் தற்போது 5வது இடத்தில் உள்ளது. விஜய்யின் அடுத்த மற்றும் கடைசி வெளியீடான 'ஜனநாயகன்' டிரைலர் முதலிடத்தில் உள்ளது. 'மங்காத்தா' ரீரிலீஸ் டிரைலர் அந்த டிரென்டிங் பட்டியலில் இடம் பெறவில்லை.