தோல்வியை நோக்கி, பிரபாஸின் 'தி ராஜா சாப்'
'பாகுபலி' படங்களுக்குப் பிறகு பான் இந்தியா நடிகர் என்ற சிறப்பான ஒரு இமேஜைப் பெற்றவர் தெலுங்கு நடிகரான பிரபாஸ். அதன்பின் அவர் நடித்து வெளிவந்த படங்களின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுவதும் அதில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெறுவதும், மற்றவை தோல்வியடைவதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்த சங்கராந்திக்கு முதல் படமாக ஜனவரி 9ம் தேதியே பிரபாஸ் நடித்த 'தி ராஜா சாப்' படம், பான் இந்தியா படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
உலக அளவில் முதல் நாள் வசூலாக 112 கோடியும், அதற்கடுத்து 3 நாள் வசூலாக 183 கோடியும், 4 நாள் வசூலாக 201 கோடியும், ஒரு வாரத்தில் 238 கோடியும் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதற்கடுத்து அமெரிக்காவில் 2.3 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்தது என்றும் அறிவித்தார்கள். ஆனால், கடந்த 5 நாட்களாக படம் குறித்த எந்த ஒரு வசூல் விவரத்தையும் அறிவிக்கவில்லை. படம் எதிர்பார்த்தபடி வசூலிக்கவில்லை என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
சங்கராந்திக்கு வெளிவந்த மற்ற தெலுங்குப் படங்கள் 'தி ராஜா சாப்' படத்தை விடவும் வரவேற்பைப் பெற்றதால் இப்படத்தின் வசூல் குறைய ஆரம்பித்ததாகச் சொல்கிறார்கள்.
படத்தின் பட்ஜெட் சுமார் 400 கோடிக்கும் மேல் என்கிறார்கள். தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்புப்படி 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. தியேட்டர் வருவாயைப் பொறுத்தவரையில் சுமார் 55 சதவீதம் கிடைத்துள்ளதாம். மீதமுள்ள சதவீதம் கிடைப்பதில் சிக்கல் என்கிறார்கள்.
2024ல் பிரபாஸ் நடித்து வெளிவந்த 'கல்கி 2898 ஏடி' படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. கடந்த வருடம் அவர் நாயகனாக நடித்த படம் எதுவும் வரவில்லை. 'கண்ணப்பா' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து 'பாகுபலி தி எபிக்' என வெளியிட்டார்கள்.
பிரபாஸ் தற்போது 'பவுசி, ஸ்பிரிட்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.