உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ...

ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ...


எச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் சிக்கியுள்ளது. தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தை தயாரிப்பு நிறுவனம் நாடியது. உயர்நீதிமன்ற தனி நீதிபதி தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால், அதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்ததில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தது உயர்நீதிமன்ற அமர்வு. மேலும் இந்த வழக்கு விசாரணை ஜன.,20க்கு ஒத்திவைத்தது.

அதன்படி, இன்று (ஜன.,20) விசாரணைக்கு வந்தபோது, வாதம் நடத்த ஒவ்வொரு தரப்புக்கும் அரை மணி நேரம் வழங்குவதாக தலைமை நீதிபதி எம்எம் ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் அமர்வு தெரிவித்தது. இதனையடுத்து தணிக்கை வாரியம் முதலில் தன் வாதத்தை முன்வைத்தது.

தணிக்கை வாரியத்தின் வாதம்:
ஜனநாயகன் படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பும் முடிவில் தாமதம் எதுவும் இல்லை. ஜன.,5ம் தேதியே மறு தணிக்கைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. 6ம் தேதி இந்த வழக்கு தொடரும்போதே படத்தை மறு ஆய்வு கமிட்டிக்கு அனுப்ப முடிவு என்பது பட நிறுவனத்துக்கு தெரியும். நாங்கள் நிராகரித்து உத்தரவிடும் முன்பே தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. மறு தணிக்கைக்கு படக்குழு தடை கேட்கவே இல்லை. படக்குழு கேட்காத நிவாரணத்தை நீதிபதி வழங்கினார். மறு ஆய்வு கமிட்டிக்கு கால அவகாசம் அளித்து இருக்க வேண்டும். ஆனால் தனி நீதிபதி கால அவகாசம் அளிக்கவில்லை.

ஜனநாயகன் படத்திற்கு 14 கட்களை தணிக்கை குழு பரிந்துரைத்தது இடைக்கால முடிவு, இறுதி முடிவல்ல. 14 கட்களை முடித்துவிட்டு படக்குழு வருவதற்கு முன்னர் ஜனநாயகனுக்கு எதிராக புகார் வந்ததால் அதன் அடிப்படையில் யுஏ சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டது. 14 கட்களை செய்திருந்தாலும் படத்தை பார்த்து தான் முடிவு எடுக்க முடியும்.

நீதிபதிகள்:
சான்றிதழை நிறுத்தி வைக்கும் பரிந்துரையை வழங்கியது யார்? ஜனநாயகன் படத்தை பார்த்தது சென்சார் போர்டு உறுப்பினர்களா?

தணிக்கை வாரியம்:
மும்பை சென்சார் வாரியம் சான்றிதழை நிறுத்தி வைக்க கூறியது. தணிக்கை அதிகாரி படத்தை பார்க்கவில்லை, உறுப்பினர்கள் தான் பார்த்துள்ளனர். இந்த விவகாரத்தில் விதிகளின் படிதான் தணிக்கை வாரியம் செயல்பட்டுள்ளது. மண்டல அலுவலகத்தில் உள்ள ஆய்வு குழுவின் முடிவுகள், தணிக்கை வாரியத்தை கட்டுப்படுத்தாது.

நீதிபதிகள்:
ஒரு படம் அனுமதி கோரி விண்ணப்பித்தால் என்ன மாதிரி நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றது?

தணிக்கை வாரியம்:
மண்டல தணிக்கை வாரியம் தரப்பில் புகார் வந்தால் மும்பையில் உள்ள மறு ஆய்வு குழுவிற்கு அனுப்பப்படும்.

நீதிபதிகள்:
மண்டல தணிக்கை வாரியத்தில் யார் படத்தை பார்த்தார்கள்? சட்டப்படி படத்தை பார்த்து ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது?

தணிக்கை வாரியம்:
படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்துள்ளது.

நீதிபதிகள்:
மண்டல அதிகாரி படத்தை பார்த்தாரா?

தணிக்கை வாரியம்:
மண்டல தணிக்கை அதிகாரி படத்தை பார்க்கவில்லை. படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அவர்கள்தான் படம் பார்த்துள்ளனர். படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து தணிக்கை வாரியம் தான் இறுதி முடிவு அறிவிக்கும்.

நீதிபதிகள்:
யுஏ சான்றிதழ் என முடிவெடுத்துவிட்டு பிறகு மாறியது ஏன்?

தணிக்கை வாரியம்:
மண்டல தணிக்கை வாரிய முடிவுகளை மும்பை வாரியத்தால் நிறுத்த முடியும். அவர்களுக்கே இறுதி அதிகாரம் உள்ளது. விதிகளின்படி 72 நிமிடங்களுக்கு மேல் நீளமான படங்களுக்கு தணிக்கை வாரிய தலைவர் தான் இறுதி முடிவு எடுப்பார். குழு உறுப்பினர்கள் பரிந்துரைத்தாலும் சான்றிதழை வழங்குபவர் தணிக்கை வாரிய தலைவர்தான். அவர் ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் வழங்க முடிவெடுக்கவில்லை. மறு தணிக்கை எனும் முடிவை படக்குழு எதிர்க்கவில்லை. ஆனால், தனி நீதிபதி பட நிறுவனம் கேட்காத நிவாரணத்தை வழங்கியுள்ளார்.

நீதிபதிகள்:
ஜனநாயகன் சான்றிதழ் விவகாரத்தில் தனி நீதிபதி ஒரே நாளில் முடிவெடுத்துள்ளார். தணிக்கை வாரியம் பதிலளிக்க அவகாசம் வழங்கவில்லை. பதில் மனு தாக்கல் செய்ய அவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு நாளாவது அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். மனுதாரர் கேட்கப்படாத கோரிக்கைகளையும் நீதிமன்றம் வழங்க முடியும்.

தயாரிப்பு நிறுவனம்:
டிச.,18ல் சான்றிதழுக்கு விண்ணப்பித்தோம், டிசம்பர் 19ம் தேதியே ஜனநாயகன் படத்தை தணிக்கை குழு பார்த்துள்ளது. தணிக்கை வாரியத்தின் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்டோம், எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர்கள் ஆட்சேபனை தெரிவித்த காட்சிகளை நீக்கி டிச.,25ம் தேதியே தணிக்கை வாரியத்திற்கு அனுப்பிவிட்டோம். ஆனால், டிச.,29க்கு பிறகு தணிக்கை வாரியத்தின் தகவல்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. ஜனநாயகன் படம் பற்றி புகார் அளித்தது யார், என்ன புகார் என்ற தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தணிக்கை தொடர்பான அனைத்து தகவல்களும் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது.

மறுதணிக்கைக்கு அனுப்ப உள்ளதாக தகவல் மட்டுமே சொன்னார்கள். உத்தரவு நகல் எதுவும் வழங்கப்படவில்லை. மறுதணிக்கை எனும் தகவலை மட்டுமே சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ரத்து செய்தார். விதிகளின் படி 2 நாளில் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தணிக்கை வாரியம் முடிவு செய்ய வேண்டும். முடிவு செய்யாவிட்டால் அது தொடர்பான தகவலை மனுதாரர்களுக்கு தணிக்கை வாரியம் தெரிவிக்க வேண்டும்.

நீதிபதிகள்:
மறுதணிக்கை எனும் தகவல் மட்டுமே ரத்து என்றால், சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட முடியாது. போதுமான கால அவகாசத்தை தணிக்கை வாரியத்திற்கு வழங்கியிருக்க வேண்டும். தயாரிப்பு தரப்பு நிர்பந்தம் கொடுத்ததாலேயே அவசரமாக விசாரிக்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரியத்திற்கு ஒரு நாள் அவகாசம் கொடுத்திருந்தால் கூட தனி நீதிபதியின் விசாரணை கேள்விக்குள்ளாகி இருக்காது. படத்திற்கு எதிராக புகார் யாரிடம் கிடைத்தது?

தணிக்கை வாரியம்:
ஜனநாயகன் படத்துக்கு எதரிாக மும்பையில் உள்ள தணிக்கை வாரிய தலைவரிடம் புகார் வந்தது. தணிக்கை சான்றிதழ் அளிக்கும் வரை புகார் அளித்தவரை பற்றி கூற முடியாது.

தயாரிப்பு நிறுவனம்:
படத்தை பார்த்து முடித்ததும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து பரிந்துரை வழங்க வேண்டும். மாறாக வீட்டுக்கு சென்றுவிட்டு 4 நாட்களுக்கு பின் புகார் அளிக்க முடியாது.

நீதிபதிகள்:

தணிக்கை வாரிய தலைவரின் முடிவு தொடர்பான ஆவணம் எங்கே?

தயாரிப்பு நிறுவனம்:
தணிக்கை வாரிய தலைவரின் முடிவு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

தணிக்கை வாரியம்:
அனைத்தும் இ-சினி பிரமான் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

நீதிபதிகள்:
உத்தரவு ஆவணத்தை தற்போது வரை யாருமே பார்க்கவில்லையா?

தணிக்கை வாரியம்:
ஆட்சேபனை தெரிவித்த காட்சிகளை நீக்கிய பிறகு, மீண்டும் அதே காட்சிகள் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது. நீக்கிய பிறகும் அதே காட்சிகள் தொடர்பாக புகார் அளித்துள்ளனர். ஒரே காட்சியை எத்தனை முறை நீக்குவது? காட்சியை நீக்கிய பிறகு படத்தை பார்த்து என்ன பயன்? அதிலென்ன சந்தோஷம்? தணிக்கை வாரியத்தின் நடவடிக்கையால் தேவையற்ற மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி படத்தை வெளியிடாததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதியை தெரிவிக்கவில்லை என்றால் படத்தை வாங்கிய அமேசான் ஓடிடி நிறுவனம் நஷ்டஈடு கேட்கிறது. எங்களிடம் நஷ்டஈடு கேட்டால் என்ன செய்வது?

நீதிபதிகள்:
ஒரே நாளில் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் முடித்து உத்தரவு வழங்க முடியாது. ஜனநாயகன் படத்திற்கு மட்டும் எந்த விதிவிலக்கும் அளிக்க முடியாது. ஜனநாயகன் பட வழக்கை அரிதினும் அரிதான வழக்காக கருத முடியாது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !