வருண் தவானுக்கு மும்பை மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை
பாலிவுட் நடிகர் வருண் தவான், சமீபத்தில் வெளியான 'பார்டர் 2' திரைப்படத்தில் அக்ஷய் கண்ணா உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் உற்சாகத்தில் இருக்கும் வருண் தவான் இந்த படத்தை இன்னும் ரசிகர்களிடம் கொண்டு செல்லும் விதமாக வித்தியாசமான புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் மும்பை மெட்ரோ ரயிலில் பயணித்த வருண் தவான், அங்கே நின்று கொண்டே பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக மேலே தொங்கிக் கொண்டிருக்கும் கைப்பிடிகளைப் பிடித்து தொங்கியபடி பிட்னஸ் பயிற்சி செய்ய தொடங்கினார். இது குறித்த வீடியோ ஒன்றையும் அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து மஹாராஷ்டிரா மும்பை மெட்ரோ நிர்வாகம் நடிகர் வருண் தவானின் இந்த செயலுக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், “நீங்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ உங்களது ஆக்சன் படங்களில் ஒன்றாக பாதுகாப்பு குறிப்புகளுடன் வெளியாகி இருந்திருக்க வேண்டும். ஆனால் இதுபோன்று மஹா மும்பை மெட்ரோவில் இதை முயற்சித்து பார்க்கக் கூடாது. மெட்ரோவில் இருக்கும் கைப்பிடிகள் பயணிகளின் வசதிக்காக தானே தவிர இது போன்று உடற்பயிற்சி செய்து பழகுவதற்கு அல்ல. வேடிக்கையான நிகழ்வுகளும் கொண்டாட்டங்களும் இருக்கலாமே தவிர, அது பயணிகளின் பாதுகாப்பை முதலில் உறுதி செய்வதாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து ஒருவேளை வருண் தவானின் இந்த செயலுக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.