சம்மர் ஜாக்பாட் ஆக 21 நாள் இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகும் மோகன்லாலின் படங்கள்
மலையாளத்தில் ரசிகர்களிடம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கூட்டணி இயக்குனர் ஜீத்து ஜோசப்-மோகன்லால் இருவரின் கூட்டணி தான். ஏற்கனவே இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான 'திரிஷ்யம்' படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இதன் மூன்றாம் பாகமும் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மோகன்லால் நடித்து வரும் இன்னொரு படம் 'பேட்ரியாட்'. இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன்லால், மம்முட்டி இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். அதுமட்டுமல்ல இந்த படத்தில் முக்கிய வேடங்களில் பஹத் பாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் இருவரும் இணைந்து நடிக்க, நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஒரு மல்டி ஸ்டார் படமாக மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி உள்ளது.
இந்த படத்தை 'விஸ்வரூபம்' எடிட்டரும், 'டேக் ஆப்' படத்தின் இயக்குனருமான மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார். தற்போது இந்த படமும் அதே ஏப்ரல் மாதம் 23ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சம்மர் விடுமுறை என்பதால் 21 நாள் இடைவெளியில் வெளியானாலும் கூட இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடையே வரவேற்பும் தேவையான வசூலும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இப்படி ஒரே மாதத்தில் இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளார்கள் என்றே தெரிகிறது.