வழக்கை வாபஸ் பெறுகிறதா 'ஜனநாயகன்' குழு
கர்நாடகாவைச் சேர்ந்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தின் தணிக்கை வாரியம் தொடர்பான நீதிமன்ற வழக்கு சென்னை, உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியம் செய்த மேல் முறையீடு மீது விசாரணை நடந்து இரண்டு தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. தணிக்கை வாரியத்திற்கு போதிய அவகாசம் கொடுத்து தொடர்ந்து வழக்கை தனி நீதிபதியே விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. தீர்ப்பின் முழு விவரமும் வெளியாகியுள்ளது.
இதனிடையே, தொடர்ந்து வழக்கை நடத்தி அதற்கு இன்னும் சில வாரங்கள் போகும். பின்னர் தணிக்கை சான்றிதழ் பெற கூடுதலாக சில வாரங்கள் ஆகும் என்பதை 'ஜனநாயகன்' சம்பந்தட்ட குழுவினர் ஆலோசித்துள்ளதாகத் தெரிகிறது. அதனால், வழக்கை வாபஸ் பெறும் யோசனையில் அவர்கள் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
அப்படி வழக்கு வாபஸ் பெறப்பட்டால், தணிக்கை வாரியம் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பும். அவர்கள் படம் பார்த்த பிறகு சொல்லும் 'கட்'களை சரி செய்து கொடுத்தால் தணிக்கை சான்றிதழ் கிடைக்கும். அதிகபட்சமாக அதற்கு ஒரு மாத காலம் ஆகும்.
படத்தின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை வாங்கியவர்களும் தயாரிப்பு நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுப்பதாகவும் சொல்கிறார்கள். தியேட்டர் வெளியீட்டுத் தேதியைப் பொறுத்தே ஓடிடி, சாட்டிலைட் டிவி உரிமை நல்ல விலைக்கு வாங்கப்படுகிறது. விஜய் படம், அதுவும் அவரது கடைசி படம் என்பதால் அந்த உரிமைகளுக்கான முழு தொகையை அவர்கள் கொடுத்திருப்பார்கள். வெளியீடு தள்ளிப் போக, தள்ளிப் போக அவர்களுக்குத்தான் நஷ்டம்.
படத்தின் தியேட்டர் வெளியீட்டுத் தேதி, ஓடிடி வெளியீட்டுத் தேதி ஆகியவை ஒப்பந்தப்படி நடக்காமல் போனால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் 'உட்பிரிவு' ஒன்றையும் அதில் சேர்த்திருப்பார்கள். இப்படி எதுவும் நடக்காமல் இருக்க மிக விரைவில் ஏதாவது ஒரு அறிவிப்பு வரலாம்.