'ராஜா' என்ற பெயரும் 'காப்பிரைட்'டில் வருகிறதா?
2024ம் ஆண்டில் வெளிவந்த 'வெப்பம் குளிர் மழை' என்ற படத்தை இயக்கி, நாயகனாகவும் அறிமுகமானவர் திரவ். அவர் இயக்கத்தில் கிஷோர், சுபத்ரா ராபர்ட் மற்றும் பலர் நடித்துள்ள 'மெல்லிசை' படம் நாளை ஜனவரி 30ம் தேதி வெளியாக உள்ளது.
உடற்கல்வி ஆசிரியராக இருக்கும் கிஷோர் நன்றாகப் பாடக் கூடியவர். மகளின் ஆசைக்காக டிவி பாட்டு போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடுகிறார். இதனால் படத்தில் சில பழைய பாடல்களையும் இயக்குனர் பயன்படுத்தியுள்ளார். அதில் இளைராஜாவின் பாடல்களும் அடங்கும். மேலும், இந்தப் படத்தை ஆரம்பித்து 2021ல் இதற்காக தணிக்கை சான்றிதழ் பெறும் போதும் 'ராஜாக்கு ராஜா டா' என்றுதான் பெற்றுள்ளார்.
படத்தை வெளியிடும் வேலைகளை கடந்த வருடம் மீண்டும் முயற்சித்த போது அந்தத் தலைப்பிற்கு அவருக்கு காப்பிரைட் சிக்கல் வந்துள்ளது. இதையடுத்து தணிக்கை வாரியத்திடம் விண்ணப்பித்து 'மெல்லிசை' என படத்தின் தலைப்பை மாற்றியுள்ளார். படத்தின் சென்சார் சான்றிதழில் தலைப்பு மாற்றப்பட்டதன் தகவல் இடம் பெற்றுள்ளது.
நேற்று படத்தின் பத்திரிகையாளர் காட்சியும் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பும் நடந்த போது இது குறித்த கேள்விக்கு படத்தின் இயக்குனர் திரவ் பதிலளிக்கையில்,
“நான் ராஜா சாரின் தீவிர ரசிகன். படத்தில் இடம் பெற்றிருந்த இளையராஜா பாடல்கள் அனைத்தும் அவரிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே பயன்படுத்தப்பட்டது. சில பாடல்களை என்னால் பயன்படுத்த முடியவில்லை. மியூசிக் லேபிள் அதை வைத்திருந்தார்கள். அந்தப் பாடல்களை நீக்கிவிட்டேன். படம் எடுக்கும் போது இந்த சட்ட விவகாரம் எதுவும் தெரியவில்லை. முடிவதற்குள் அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.
விஜய் சேதுபதி நடித்து 'மெல்லிசை' என்ற படம் சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பமானது. அதன்பின் அதை 'புரியாத புதிர்' என மாற்றி தணிகை சான்றிதழையும் அந்தத் தலைப்பில் பெற்றுத்தான் படத்தை வெளியிட்டார்கள். இந்த 'மெல்லிசை' என்ற தலைப்பு என்னிடம்தான் ஏழு வருடங்களாக இருக்கிறது.
இந்தப் படத்திற்கு முதலில் 'ராஜாக்கு ராஜாடா' என்ற பெயரை வைத்திருந்தோம். காப்பிரைட் பிரச்னையால் படத்தின் பெயரை பின்னர் 'மெல்லிசை' என்று மாற்றிவிட்டோம். மீண்டும் சொல்கிறேன் நான் ராஜா சாரின் தீவிர ரசிகன். படம் எடுக்கும் போது இந்த விவகாரங்கள் எதுவும் தெரியாது. அதன்பின் எப்படியோ தாண்டித் தாண்டி வந்துவிட்டேன்,” என்றார்.
இளையராஜா ரசிகர் என்பதாலும், படத்தில் கதையின் நாயகன் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்பவர் என்பதாலும் இந்தப் படத்திற்கு முதலில் 'ராஜாக்கு ராஜா டா' என தலைப்பு வைத்துள்ளார் இயக்குனர். சமீபத்தில் தனது பெயரை வணிக ரீதியில் பயன்படுத்துவதற்கு இளையராஜா நீதிமன்றத் தடை பெற்றிருந்தார். அதன் காரணமாக இந்தப் படத்தின் பெயரும் மாற்றப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால், இயக்குனர் அதை வெளிப்படையாகச் சொல்லவில்லை.