'வேள்பாரி' பட வேலைகள் ஆரம்பமாகி உள்ளதா?
எழுத்தாளரும், மதுரை எம்.பி.யுமான வெங்கடேசன் எழுதிய நாவல் 'வீரயுக நாயகன் வேள்பாரி'. வார இதழ் ஒன்றில் தொடராக வந்த இந்த நாவல் பின்னர் தனி நூலாகவும் வெளியிடப்பட்டது. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் என்றழைக்கப்படும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை எதிர்த்து மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் வேளிர் குலத் தலைவன் பாரி புரியும் போர் தான் இந்த நாவலின் கதை. ஒரு வரலாற்று புனைவுக் கதை.
அந்த நாவலைப் படமாக்கப் போவதாக இயக்குனர் ஷங்கர் ஏற்கெனவே கூறியிருந்தார். கொரோனா காலகட்டத்தில் அதற்கான திரைக்கதையை எழுதிவிட்டதாகவும் சொல்லியிருந்தார். ஆனால், அது எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியாமலேயே இருந்தது.
ஷங்கர் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த 'இந்தியன் 2', தெலுங்கில் வெளிவந்த 'கேம் சேஞ்ஜர்' ஆகிய இரண்டு படங்களும் படுதோல்வி அடைந்தது. கடந்த ஒரு வருட காலமாக தனது அடுத்த படம் குறித்த எந்த அறிவிப்பையும் ஷங்கர் வெளியிடாமல் இருக்கிறார். 'இந்தியன் 3' படத்தின் நிலை என்ன என்பதும் தெரியவில்லை.
இதனிடையே, கடந்த சில நாட்களாக 'வேள்பாரி' படம் பற்றி சமூக வலைத்தளங்களில் பலரும் பேசி வருகிறார்கள். படத்தை எடுக்க ஒரு தயாரிப்பு நிறுவனம் முன் வந்துள்ளதாகவும், படத்தின் சரியான பட்ஜெட், சரியான படப்பிடிப்பு நாட்கள், அவற்றை மீறி எதுவும் நடக்காது என்ற உத்தரவாதம் ஆகியவற்றை ஷங்கர் தரப்பு தர வேண்டும் என்ற கண்டிஷனுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் பரவியுள்ளது.
ஷங்கர் படம் என்றால் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரையில் யூகங்களாகவே இருக்கும். தற்போது வெளிவந்துள்ள தகவல்கள் எப்படிப்பட்டது என்பது சீக்கிரம் தெரிய வரலாம்.