தெலுங்கு திரையுலகை அதிர வைத்த இரண்டு தோல்விகள்
தெலுங்கு திரையுலகத்தில் சமீப காலங்களில் பான் இந்தியா படங்கள் என்பது மிகவும் பிரபலமாகிவிட்டது. சில முன்னணி நடிகர்கள் பான் இந்தியா படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற ஒரு வழக்கத்தை வைத்துள்ளனர். அப்படி பான் இந்தியா என்பதை 'பாகுபலி' மூலம் ஆரம்பித்த பிரபாஸ் தற்போது வரை அப்படி மட்டுமே நடித்து வருகிறார்.
அவர் நடித்து இந்த சங்கராந்திக்கு வெளிவந்த 'தி ராஜா சாப்' படம் 200 கோடிக்குக் கொஞ்சம் கூடுதலாக வசூலித்து தனது ஓட்டத்தை ஏறக்குறைய இன்றுடன் முடித்துக் கொள்ள உள்ளது. ஓரிரு தியேட்டர்களில் மட்டுமே இந்த வார இறுதி வரை இருக்க வாய்ப்புள்ளது. இந்தப் படத்தின் தோல்வி தெலுங்குத் திரையுலகத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சங்கராந்திக்கு வந்த 5 படங்களில் 2 படங்கள் தவிர மற்ற மூன்று படங்கள் லாபகரமாக அமைந்துவிட்டது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12ம் தேதி வெளிவந்த பாலகிருஷ்ணா நடித்த 'அகண்டா 2' படம் தோல்வியடைந்து அதிர்ச்சியைத் தந்தது. அடுத்த ஒரு மாதத்தில் 'தி ராஜா சாப்' தந்த தோல்வியும் மீண்டும் ஒரு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இரண்டு முன்னணி நடிகர்களின் தோல்விகள் ஒரு பக்கம் இருந்தாலும் 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படத்தின் மூலம் சிரஞ்சீவி பெற்ற வெற்றி அவர்களுக்கு மிகப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.
கடந்த வருட சங்கராந்திக்கு தமிழ் இயக்குனர் 'ஷங்கர்' இயக்கத்தில் சிரஞ்சீவி மகன் ராம் சரண் நடித்து வெளிவந்த 'கேம் சேஞ்ஜர்' படுதோல்வியைத் தழுவியது. அதே சமயம் இந்த வருடத்தில் 'ஷங்கர' சிரஞ்சீவி காரு மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.