வாரணாசியில் 'வாரணாசி' வெளியீட்டுத் தேதி பேனர்கள்?
ராஜமவுலி இயக்கத்தில், மகேஷ் பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 'வாரணாசி'. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு ஓரிரு மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வாரணாசி, பனாரஸ் என்றழைக்கப்படும் காசி மாநகரில் பல இடங்களில் 'இன் தியேட்டர்ஸ்' என்றும் 'ஏப்ரல் 7, 2027' என்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அது 'வாரணாசி' படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள பேனர்கள் என்ற பேச்சு எழுந்துள்ளது. முதலில் இப்படி அறிவித்துவிட்டு பின்னர் அதில் படத்தின் பெயரை சேர்க்கும், ஒரு விளம்பர யுத்தியை படக்குழு செய்வதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
2027 ஏப்ரல் மாதம் 7ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான 'யுகாதி' பண்டிகை வருகிறது. ஆன்மிகம் சார்ந்த படமாக உருவாகி வரும் 'வாரணாசி' படத்தை வெளியிட அதை விட சிறந்த தேதி இருக்க வாய்ப்பில்லை என அத் தேதியைத் தேர்வு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
இந்த பேனர் சஸ்பென்ஸ் என்ன என்பது விரைவில் தெரிய வரும்.