உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆளுமை உரிமை பாதுகாப்பு பெற்றார் ஜுனியர் என்டிஆர்

ஆளுமை உரிமை பாதுகாப்பு பெற்றார் ஜுனியர் என்டிஆர்

ஏஐ மூலம் பிரபலங்களின் பலவிதமான போலியான புகைப்படங்கள், வீடியோக்களை சிலர் வெளியிட்டு வருகிறார்கள். அவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 'பர்சனாலிட்டி ரைட்ஸ்', அதாவது தங்களது 'ஆளுமை உரிமை'யை பிரபலங்கள் பாதுகாத்துக் கொள்ள துவங்கியிருக்கிறார்கள்.

இதற்கு முன்பு இசையமைப்பாளர் இளையராஜா, பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர்கள் அமிதாப்பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராப், அக்ஷய்குமார், சல்மான் கான், அபிஷேக் பச்சன், மாதவன், இயக்குனர் கரண் ஜோஹர், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பவன் கல்யாண், மகேஷ்பாபு, நாக சைதன்யா ஆகியோரும் இப்படி தங்களது ஆளுமை உரிமையைப் பெற்றுள்ளார்கள். நடிகர் கமல்ஹாசன் இந்த வழக்கில் இடைக்காலத் தடை பெற்றுள்ளார்.

இந்நிலையில் தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜுனியர் என்டிஆர் தற்போது இந்த உரிமையைப் பெற்றுள்ளார். “என்டிஆர், ஜுனியர் என்டிஆர், என்டிஆர் ஜுனியர், தாரக், நந்தமூரி தாரக ராமராவ் ஜுனியர், ஜுனியர் நந்தமூரி தாரக ராம ராவ், மேன் ஆப் மாஸஸ், யங் டைகர்' ஆகிய வார்த்தைகளை அவரது அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது என்ற உரிமையையும் வாங்கியுள்ளார்.

இந்த ஆளுமை உரிமை பாதுகாப்பு பெறும் நடிகர்கள், நடிகைகள் பட்டியல் இன்னும் அதிகமாகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !