வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் : நகுல்
பெப்பர் மின்ட் சார்பில் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம், விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள படம் 'காதல் கதை சொல்லவா'. ஷரத் இசையமைத்துள்ளார். ஷாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகுல் நடித்துள்ள படம் இது. இந்த படத்தில் நடித்திருப்பது பற்றி அவர் கூறியிருப்பதாவது: இந்தப் படத்தின் தலைப்பை கேட்கும்போதே எனக்கு பிடித்திருக்கிறது. காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. 'பாய்ஸ்' படத்தில் நடிக்கும் போது சினிமா தொழில் மீது, கலை மீது எனக்குக் காதல் வந்தது. அதை நினைத்துப் பார்க்கும்போது எனது லவ் அதிகமாகிறது.
முதலில் அம்மா என்னை நேசித்தார்கள். நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அவர்கள் கனவு கண்டார்கள். அம்மாவின் நேசத்தை நினைத்துக் கொள்கிறேன். என் உடலின் மீது ஒரு காதல் வந்தது அதற்குப் பிறகு உடற்கட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தேன். அதேபோல் எனது திருமணம் குழந்தை என்று காதலுக்கு அர்த்தம் வந்தது. காதல் என்பது வாழ்க்கையின் அடிப்படையான ஒன்று.
வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். எது எப்போது நடக்குமோ அது அப்போது நடக்கும் அதுதான் எனது வாழ்க்கையில நடக்கிறது. இந்தப் படத்தில் வித்தியாசமான கதை உள்ளது. இதில் வித்தியாசமான பாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இங்கே எல்லோருக்கும் ஒரு காதல் கதை இருக்கிறது. இந்தக் கதையை அனைவரும் தொடர்பு படுத்திப் பார்த்துக் கொள்ள முடியும். என்றார்.