சினிமாவில் கமிஷன்களை ஒழிக்க வேண்டும்: 'ரெட் லேபிள்' தயாரிப்பாளர் லெனின்
லெனின், அஸ்மின் நடிக்கும் படம் 'ரெட் லேபிள்'. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கவுரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடிக்க, இயக்குநர் அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். பிப்ரவரி 6ம் தேதி படம் ரிலீஸ்.
படம் குறித்து தயாரிப்பாளரும் கதாநாயகனாக நடித்துள்ளவருமான லெனின் பேசுகையில், ''இந்த ஒரே படத்தில் எனக்குப் பல அனுபவங்கள் கிடைத்தன. படத்திற்குத் தலைப்பு பதிவு செய்வதே சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது. முதலில் ஒரு தலைப்பைப் பதிவு செய்தோம். கிடைத்தது, பிறகு அது காலாவதி ஆகிவிட்டது, இல்லை என்றார்கள். அதைப் புதுப்பிக்க வேண்டும் என்கிற விஷயம் எனக்குத் தெரியாது. ஓர் ஆண்டுக்குள் புதுப்பிக்க வேண்டுமாம். பிலிம் சேம்பரில் தலைப்பு பதிவு செய்யும்போது நாம் ஒரு ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பிலிம் சேம்பரில் கணினி மயமாக்கி இணைத்தால் மிகச் சுலபமாக இந்த வேலையைச் செய்ய முடியும். ஆனால் யாரும் இதைச் செய்வதில்லை. நான் படப்பிடிப்பில் கேட்கிற அளவுக்கெல்லாம் வசதிகள் செய்து கொடுக்க மாட்டேன். ஒரு காட்சியில் 10 நாற்காலிகள் வேண்டுமென்றால் ஐந்து தான் கொடுப்பேன். இப்படித்தான் நான் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டு மிச்சப்படுத்தினேன். இந்த சினிமாவில் எதற்கெடுத்தாலும் கமிஷன் என்கிற போக்கு இருக்கிறது. இது மிகவும் தவறானது. இதைப் பார்த்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சினிமாவில் கமிஷன்கள் ஒழிக்கப்பட வேண்டும்.
சினிமாவில் ஒரு தயாரிப்பாளர் செலவு செய்வது அனைத்தும் செலவுக் கணக்கில் தெரியுமா என்றால் தெரியாது .ஒரு படத்திற்கு 5 கோடி செலவு செய்கிறார்கள் என்றால் பத்திலிருந்து பதினைந்து சதவீதம் செலவில் வராது. கமிஷனாகப் போய் விடுகிறது. இப்படி நாலு ஷெட்யூலுக்கு நாலு யூனிட் மாற்றினேன். முதலில் ஒரு லட்சம் கேட்டார்கள், பிறகு 90 ஆயிரம், பிறகு 80 ஆயிரம், 70 ஆயிரம் என்று மாறிக்கொண்டே போனது. இது எப்படி இடையில் அவ்வளவு கமிஷன் போகிறது. சம்பளம் வாங்குவது மட்டும் போதாதா? கமிஷன் ஏன் வாங்குகிறார்கள்? சினிமாவில் கமிஷனை ஒழிக்க வேண்டும்.
சங்கர் சார் லஞ்சத்தை ஒழிப்பதற்குப் படம் எடுத்தது மாதிரி இதையும் ஒழிக்கப் படமாக எடுக்க வேண்டும். இந்த கமிஷன் சினிமாவில் வெகு சகஜமாக இருக்கிறது. நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து படம் எடுக்க வந்தால் இடையில் உள்ளவர்கள் யாராவது சாப்பிட நினைக்கிறார்கள். நான் சம்பாதித்த காசுக்கு எனக்கு கணக்கு வேண்டும். இதை நான் விடமாட்டேன்.
இன்னொரு அனுபவம். ஒரு குணச்சித்திர நடிகரை அணுகிய போது பெரிய சம்பளம் கேட்டார். அது அவரது விருப்பம் பரவாயில்லை. ஆனால் பயணப்படியாக கிலோமீட்டருக்கு இருபது ரூபாய் கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் நான் கொடுக்க வேண்டும்? அதுபோல உதவியாளர்கள் சம்பளமும் ஒழிக்கப்பட வேண்டும். இப்படி எல்லாம் நிபந்தனை போட்டால் யாரும் வர மாட்டார்கள். ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.