ராமுக்கு என்னதான் ஆச்சு? நம்பிக்கையுடன் பேசிய ஜீத்து ஜோசப்
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த திரிஷ்யம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர்கள் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் வெற்றிகரமாக கொடுத்தார்கள். தற்போது திரிஷ்யம் மூன்றாம் பாகமும் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி அந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படங்கள் தவிர 12த் மேன், நேர் என இன்னும் இரண்டு வெற்றி படங்களையும் இந்த கூட்டணி கொடுத்திருக்கிறது. அதேசமயம் கடந்த கொரோனா காலகட்டத்தில் அதாவது திரிஷ்யம் 2 துவங்கப்படுவதற்கு முன்பாகவே மோகன்லால், ஜீத்து ஜோசப் கூட்டணியில் ராம் என்கிற திரைப்படம் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பும் நடைபெற்றது.
திரிஷா இதில் கதாநாயகியாக ஒப்பந்தமானார். வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்தில் கொரோனா காரணமாக அந்த படம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆன நிலையில் மீண்டும் ராம் படத்தின் படப்பிடிப்பை ஜீத்து ஜோசப்பால் மீண்டும் துவங்க முடியவில்லை. அதற்கு தயாரிப்பாளரின் பொருளாதார நெருக்கடி காரணங்களும் பின்னணியாக சொல்லப்பட்டன.
இந்த நிலையில் சமீபத்தில் ராம் படம் குறித்து மனம் திறந்து பேசிய ஜீத்து ஜோசப் கூறும்போது, “இப்போதும் ராம் படம் குறித்து விவாதம் போய் கொண்டிருக்கிறது. கடவுள் அனுக்கிரகம் இருந்தால் அடுத்த மாதமே அந்த படத்தை துவங்க வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன். அதற்கேற்றவாறு நான் எப்போது தேதிகளை கேட்கிறேனோ அதை உடனடியாக தருவதற்கு மோகன்லால் தயாராக இருக்கிறார். அந்த அளவிற்கு ராம் படத்தை அவர் தன்னுடைய முக்கிய பட்டியலில் வைத்துள்ளார்” என்று கூறியுள்ளார்.