உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிகரெட் பிடிக்கமாட்டேன், தண்ணி அடிக்கமாட்டேன் : லெஜண்ட் சரவணன்

சிகரெட் பிடிக்கமாட்டேன், தண்ணி அடிக்கமாட்டேன் : லெஜண்ட் சரவணன்

ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் லீடர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இந்த படத்தில் பக்கா ஆக் ஷனுக்கு இறங்கியிருக்கிறார் சரவணன். படத்தின் அறிமுக வீடியோவில் இடம் பெற்ற சண்டைக்காட்சி வரவேற்பை பெற்றுள்ளது.

படம் குறித்து பேசிய சரவணன், ''என்னுடைய லீடர் என் அப்பாதான். நாளைய லீடர் யார் என்பதை கொஞ்ச காலம் கழித்து சொல்றேன். இந்த படம் தெலுங்கிலும் வெளியாகிறது. அங்கே இந்த தலைப்பில் ஒரு படம் வந்து இருந்தாலும், அங்கேயும் முறைப்படி தலைப்பு வாங்கிவிட்டோம். இது ஆக் ஷன் படம் என்றாலும் எமோஷன் கன்டன்ட் இருக்கிறது. படம் பார்க்கும்போது அந்த எமோஷன் டச் பண்ணும்.

லெஜன்ட் படத்தில் வேறு கெட்அப். இதுல தாடி, மீசையுடன் இருக்கிறேன். இதுவும் நல்லா இருக்கிறது. ஜனநாயகன் வேறு கதை, இந்த படம் வேறு கதை. இந்த தலைப்பை முன்பே வைத்துவிட்டோம். நான் எந்த வேலையையும் முழு முயற்சியில் இறங்கி செய்வேன். முதலில் எதை செய்தாலும் விமர்சனம் வரும். வெற்றி பெற்றுவிட்டால் அதெல்லாம் காணாமல் போய்விடும். நான் இலக்கு நோக்கி பயணிக்கிறேன். என்னை பற்றி பல மீம்ஸ் வந்தாலும் அதை பற்றி கவலைப்படவில்லை. அதை தவிர்க்க முடியாது. அதை பெரிசு படுத்த வேண்டாம். நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியம்.

எனக்கு முதலில் பேமிலி பிஸினஸ்தான் முக்கியம். சினிமா மீது சின்ன வயதில் ஆர்வம் அதிகம். அதனால்தான் சினிமாவுக்கு வந்தேன். இந்த படத்தை 97 நாட்களில் எடுத்தோம். ஜார்ஜியா, துாத்துக்குடியில் படப்பிடிப்பு நடந்தது. படத்தில் கஷ்டமான விஷயம், விடிவி கணேஷ் உடன் நடித்ததுதான். அவருடன் நடித்து மறக்க முடியாது அனுபவம். என் நீண்டகால நண்பர் என்பதால் வியாபாரிகள் சங்க தலைவர் விக்ரமராஜாவை வைத்து இந்த கிளிம்ஸ் வீடியோ வெளியிட்டேன்.

என் பெயர் சரவணன். கடைக்கு லெஜண்ட் என பெயர் வந்ததால் என் பெயர் லெஜண்ட் சரவணன் என வந்தது. இனி லீடர் சரவணன் என வராது. என்னுடைய முதல் படம் நீரிழிவு நோய் மருந்து சம்பந்தப்பட்ட நல்ல கதை. இந்த படத்திலும் நல்ல கரு இருக்கிறது. படம் பார்த்தால் பாசிட்டிவ் வைபரேசன் வரும். நான் தவறான படம் பண்ணமாட்டேன். நான் நிஜ வாழ்க்கையிலும் சிகரெட் பிடிக்கமாட்டேன். தண்ணி அடிக்கமாட்டேன். சினிமாவிலும் அதை செய்யமாட்டேன். இந்தபடத்தில் பாயல் ராஜ்புத் ஹீரோயின். முதல் படத்துக்குபின் சில பெரிய இயக்குனர்களுடன் பேசினேன். அது செட்டாகவில்லை. ஆர்.எஸ். செந்தில்குமார் என்னுடன் செட் ஆனார். இந்த படம் பாதியில் நடந்தபோதே அவரை அடுத்த படத்துக்கும் புக் பண்ணிவிட்டேன்''.

இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !