தெலுங்கிலும் தமிழ் சினிமா 'காற்று' : ஒரே நாளில் 9 படங்கள் ரிலீஸ்
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக 200க்கும் மேற்பட்ட படங்கள் ஒரு வருடத்திற்கு வெளியாகிறது. கடந்த வருடம் அது 280ஐத் தொட்டது. இந்த வருடத்திலும் அதே போல படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாதத்தில் மட்டும் 22 படங்கள் வெளிவந்தன.
பிப்ரவரி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று, “கில்லி மாப்பிள்ளை, காதல் கதை சொல்லவா, பாடும் குயிலே, ரெட் லேபில், வித் லவ், யோகிடா” ஆகிய 6 படங்கள் வெளியாகி உள்ளன. இவற்றோடு ஓடிடி தளத்தில் 'நீலகண்டா' படம் நேரடியாக வெளியாகி உள்ளது.
தமிழில் மட்டும்தான் வாராவாரம் நான்கைந்து படங்கள் வெளிவருவது வழக்கமாக உள்ளது. மற்ற மொழிகளில் அப்படிப் பார்க்க முடியாது. ஆனால், தெலுங்கில் இன்று ஒரே நாளில் 9 படங்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் வெளியாவதைப் போல தெலுங்கிலும் இந்த ரிலீஸ் காற்று அடித்துவிட்டது போலிருக்கிறது.
''பராபர் பிரேமிஸ்தா, பிளட் ரோஸஸ், எர்ரசீரா, இபோரியா, ஹனி, லக்கம் டைம், ஆபரேஷன் பத்மா, ஸ்ரீ சிதம்பரம் காரு, சுமதி சாதகம்,”என 9 படங்கள் இன்று வெளியாகி உள்ளன. இவற்றில் பிரபல இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் 'துரந்தர்' பட நாயகி சாரா அர்ஜுன் நடித்துள்ள 'இபோரியா' படம் மட்டும் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. மற்ற படங்கள் வளரும் நடிகர்கள், புதுமுகங்களின் படங்கள்.