உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்?

வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்?

'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' என இரண்டு 1000 கோடிக்கும் அதிகமான படங்களைக் கொடுத்தவர் தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி. தற்போது 'வாரணாசி' படத்தை இயக்கி வருகிறார். மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை அடுத்த வருடம் 2027, ஏப்ரல் 7ம் தேதி வெளியிட உள்ளார்கள்.

இந்த வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதனால், இப்படம் பற்றிய மேலும் சில தகவல்கள் டோலிவுட் வட்டாரங்களில் கசிந்துள்ளது. இப்படத்தை இயக்குவதற்காக ராஜமவுலிக்கு சம்பளமாக வெளிநாட்டு உரிமை தரப்பட்டுள்ளதாம்.

'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் வெளிநாடுகளில், குறிப்பாக ஹாலிவுட்டில் பெரும் கவனத்தை ஈர்த்தது. மேலும், 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. அதனால், ராஜமவுலியை ஹாலிவுட் இயக்குனர்கள் பலரும் பாராட்டினார்கள்.

தனது படங்களுக்கு உலக அளவில் வரவேற்பு இருப்பதால் ஹாலிவுட் உரிமை என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ அதை சம்பளமாகப் பெற்றுக் கொள்கிறேன் என ராஜமவுலி கூறியதாகத் தகவல். தற்போதே அந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமையை 100 கோடிக்கும் அதிகமாகக் கேட்கிறார்களாம். ஆனால், படப்பிடிப்பு முடிந்த பின்புதான் அது பற்றிய வியாபாரத்தை பேசப் போகிறார்களாம். எப்படியும் 150 கோடிக்கு அதிகமாக விலை போகும் என்கிறார்கள். அப்படி ஒன்று நடந்தால் இந்தியாவில் அதிக சம்பளம் பெறப் போகும் இயக்குனர் என்ற பெருமையை ராஜமவுலி பெறுவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !