கலைத்துறை வித்தகர் விருது : எம்.என் ராஜம் அரசுக்கு கோரிக்கை
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு 2024, 2025ஆம் ஆண்டுக்கான கலைத்துறை வித்தகர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து எம்என் ராஜமிடம் தினமலர் சார்பில் பேசினோம். அவர் கூறுகையில், ‛‛விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி. குறிப்பாக என்னை மறக்காமல் இவ்வளவு பெரிய கவுரவம் கொடுத்த தமிழக அரசு , விருது குழு, தமிழக முதல்வருக்கு நன்றி. சில மாதங்களுக்கு முன்பு வீடு தேடி வந்து என்னை வாழ்த்தி, பேசிவிட்டு சென்றார் முதல்வர். அதையும் என்னால் மறக்க முடியாது.
எனக்கும் கருணாநிதி மீது மதிப்பு, பாசம் உண்டு. அவர் வசனங்களை ரசித்து பேசிய நடிகைகளில் நானும் ஒருவள். ரங்கோன் ராதா உட்பட பல படங்களில் அது நடந்து இருக்கிறது. அதெல்லாம் பொற்காலம். உடல்நிலை காரணமாக வீட்டில் ஓய்வில் இருக்கிறேன். சமீபத்தில் நடிகர் சங்கத்தில் விருது கொடுத்தார்கள். நான் அதை நேரில் பெறும் வகையில் வீல் சேரில் சென்று வர ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். அந்த மாதிரி கலைஞர் விருது பெறவும் , வீல் சேரில் மேடைக்கு, அரங்கம் சென்று வரவும் ஏற்பாடு செய்து கொடுத்தால் கண்டிப்பாக நேரில் சென்று விருது பெறுவேன். இந்த விருது பெறுவது எனக்கும் பெருமை அல்லவா'' என்கிறார்.