சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக ஜெயராமுக்கு சம்மன்
கேரளாவையே உலுக்கி உள்ள சம்பவம் சபரிமலையில் நடந்த தங்கம் திருட்டு வழக்கு. இதனை கேரள காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது. மேலும் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது. சிறப்பு புலனாய்வு பிரிவு இதுவரை 12 பேரை கைது செய்துள்ளது. இதில் 4 பேர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் ஜெயராம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அடுத்த சில நாட்களில் அவர் அமலாக்கத்துறை முன் ஆஜராவார் என்று தெரிகிறது. ஏற்கனவே கேரள காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழு சென்னையில் வைத்து நடிகர் ஜெயராமையும் விசாரித்தது.
“சபரிமலை தங்க தகடுகளுக்கு சென்னையில் பூஜை நடந்தபோது தான் கலந்து கொண்டது உண்மைதான். பக்தியின் அடிப்படையில் மட்டுமே கலந்து கொண்டேன். அதற்கு பின்னால் இருக்கும் விஷயங்கள் பற்றி எனக்குத் தெரியாது. எல்லாவிதமான விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன்” என்று ஏற்கெனவே ஜெயராம் கூறியுள்ளார்.