ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட்
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கி, சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிப்பெற்று, முதல்வராக பொறுப்பேற்றார். அவர் கடைசியாக நடித்த 'ஜனநாயகன்' படம் இன்னும் ரிலீசாகவில்லை. இதற்கிடையே முதல்வர் விஜயின் பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி வருகிறது.
அவரது பிறந்தநாளைக்காவது ஜனநாயகன் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், சென்சார் விவகாரத்தில் இன்னும் முடிவு எட்டப்படாததால், அவரது பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வந்தனர்.
அதன்படி, ஆர்.டி. நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்த 'ஜில்லா' படம் ஜூன் 19ல் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். 2014ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதேபோல், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 'மெர்சல்' படமும் ஜூன் 19ல் ரீ ரிலீஸ் ஆகிறது. 2017ல் ரிலீசான இப்படத்தில் விஜய், 3 வேடங்களில் நடித்திருந்தார். காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நாயகிகளாக நடித்திருந்தனர். இப்படம் விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
இந்த இரு படங்களும் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆவதால், அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக அமைய உள்ளது.