பெத்தி : விரைவில் நீக்கமும், சேர்க்கையும்…
புச்சிபாபு சனா இயக்கத்தில், ராம்சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் 'பெத்தி'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில், படத்தின் நாயகியான ஜான்வி கபூரை கிளாமருக்கு மட்டுமே பயன்படுத்தியதாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்திருந்தார்கள். இதையடுத்து அது குறித்து தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்திருந்தார் இயக்குனர் புச்சிபாபு.
பட வெளியீட்டிற்குப் பின்பு இப்படம் குறித்த எந்த ஒரு புரமோஷனையும் ஜான்வி கபூர் செய்யவில்லை. அதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டார். தன்னைப் பற்றிய விமர்சனங்களால் ஜான்வி கபூர் கவலையுடன் இருப்பதாகவே தெரிகிறது.
இந்நிலையில் படத்தில் தற்போது ஜான்வி கபூரின் குறிப்பிட்ட அந்த கிளாமர் காட்சிகளை நீக்கவும், ராம்சரண், ஜெகபதி பாபு சம்பந்தப்பட்ட சில காட்சிகளை சேர்க்கவும் படக்குழு முடிவு செய்துள்ளார்களாம். சிவராஜ்குமாரின் பிளாஷ்பேக் காட்சிகளையும் கொஞ்சம் நீக்க உள்ளார்களாம். திருத்தப்பட்டவற்றிற்காக படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்கிறார்கள். தணிக்கை கிடைத்ததும் உடனடியாக மாற்றப்பட்ட காட்சிகளுடன் படம் திரையிடப்பட உள்ளது.