உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் ; ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பை மனதில் வைத்து பாக்யராஜ் புத்திசாலித்தனமாக செய்த காரியம்

பிளாஷ்பேக் ; ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பை மனதில் வைத்து பாக்யராஜ் புத்திசாலித்தனமாக செய்த காரியம்


சமீபத்தில் நடிகரம் இயக்குனருமான பாக்யராஜின் பிறந்தநாள் மற்றும் அவரது ஐம்பதாவது வருட திரையுலக பயண கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரன் கலந்து கொண்டார். இவர் 'நான் சிவப்பு மனிதன்' படத்தில் ரஜினிகாந்த் மற்றும் பாக்யராஜ் இருவரையும் ஒன்றாக வைத்து இயக்கியவர். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அந்த படம் உருவானபோது பாக்யராஜ் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட எஸ் ஏ சந்திரசேகரன், ''அந்த படத்தில் பாக்யராஜை நான் நடிக்க வேண்டுகோள் வைத்த போது உங்களுடைய ஸ்கிரிப்ட்டை கொடுத்து விடுங்கள். அதை என்னுடைய பாணியில் நான் டெலிவரி செய்து கொள்கிறேன் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார். அதுதான் எனக்கும் வேண்டும். நானும் சரி என்று சொல்லிவிட்டேன். இந்த படத்தில் நடிப்பதற்கு நான் அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்ததாக அவர் கூறினார்.. நான் சுதந்திரம் கொடுக்கவில்லை.. அவரே எடுத்துக் கொண்டார்'' என்று தமாஷாக கூறினார்.

அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இயக்குனர் பாக்யராஜ் கூறும்போது, “படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எப்போதும் கதாநாயகனை மையப்படுத்தி தான் இருக்கும். ஆனால் இந்த படத்தில் கோர்ட்டில் நடைபெறும் கிளைமாக்ஸ் காட்சியில் எனக்குத்தான் மிக நீளமான வசனங்கள் இருக்கும். ரஜினி எதுவுமே வசனம் பேசாமல் சாட்சி கூண்டில் சும்மா நிற்பது போலத்தான் இருந்தது.

ஆனால் படம் பார்க்கும்போது ரசிகர்கள் நம்ம ஹீரோ எதுவுமே பேசாமல் இவன் மட்டும் பேசிக் கொண்டே இருக்கிறானே என தேவையில்லாமல் கோபப்படுவார்கள். அதனால் நான் அந்த காட்சியில், ரஜினிகாந்த் பற்றி சில விஷயங்களை கோர்ட்டில் சொல்ல வேண்டி இருக்கிறது.. அதை அவர் இங்கே இருந்தால் சொல்ல முடியாது.. தயவு செய்து அவரை கொஞ்ச நேரம் வெளியே அழைத்துச் செல்லுங்கள் என்பது போன்று ஒரு வசனத்தை சேர்த்துக்கொண்டு அவரை வெளியே அழைத்துச் செல்வது போல காட்சியை மாற்றச் சொன்னேன். அதன்பிறகு அந்த கோர்ட் காட்சியில் ஐந்து நிமிடத்திற்கு மேற்பட்ட வசனங்களை நான் பேசியபோது அது ரஜினி ரசிகர்கள் கூட ஏற்றுக் கொள்ளும் விதமாக பொருத்தமாக அமைந்தது” என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !