உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு கூட்டணியின் புதிய படம் தள்ளிப்போகிறது?

சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு கூட்டணியின் புதிய படம் தள்ளிப்போகிறது?

'பராசக்தி' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்க உள்ள படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்றார்கள். அதற்கான வேலைகளும் ஆரம்பமாகின. இருவரும் அமெரிக்காவில் சென்று விஎப்எக்ஸ் வேலைகளுக்கான சில ஆரம்ப கட்ட சோதனைகளையும் நடத்தினார்கள். சயின்ஸ் பிக்ஷன் படமாக அப்படத்தை உருவாக்க திட்டமிட்டார்கள். ஆனால், படத்தின் பட்ஜெட்டைப் பார்த்த போது அது மிக அதிகமாகி உள்ளது.

அவ்வளவு பெரிய தொகையில் படத்தை ஆரம்பிக்கத் தங்களால் முடியாது என தயாரிப்பு நிறுவனம் சொல்லியிருக்கிறது. மீண்டும் பட்ஜெட்டை சில கோடிகள் குறைத்த பிறகும் அதுவும் அதிகம் என சொல்லப்பட்டிருக்கிறது. சிவகார்த்திகேயனின் தற்போதைய வியாபார நிலவரம், வசூல் நிலவரம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் பட்ஜெட் மிக அதிகமாம். ஓடிடி, சாட்டிலைட் டிவி உரிமை ஆகியவற்றைச் சேர்த்தாலும் கூட ரிஸ்க் என்று எண்ணியிருக்கிறார்கள். அதனால், இப்போதைக்கு படத்தைத் தள்ளி வைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

'டான்' இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால், அவர் ரஜினி படம் இயக்கப் போய்விட்டதால் அதை முடித்த பிறகுதான் சிவகார்த்திகேயன் பக்கம் வருவாராம். எனவே, சிவகார்த்திகேயன் உடனடியாக வேறு இயக்குனரைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார்.

அவரது தயாரிப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள 'தாய்கிழவி' படத்தின் இயக்குனர் சிவகுமார் முருகேசன் சொன்ன கதை ஒன்று பிடித்திருக்கிறதாம். அதை ஆரம்பிக்கலாமா என பேசி வருகிறார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !