பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்'
பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.பந்துலு தயாரித்து, இயக்கிய பிரமாண்ட படம் 'தங்கமலை ரகசியம்'. கிராமிய செவி வழி கதை போன்று தலைப்பு தெரிந்தாலும், இந்தப் படம் அப்போது ஆங்கிலத்தில் வெளிவந்த 'டார்ஜான்' என்ற படத்தின் கதையை தழுவி உருவாக்கப்பட்டது. காட்டுக்குள் மிருங்களோடு வாழும் ஒருவனுக்கு நாட்டின் ராணி மீது காதல் வந்தால் எப்படி இருக்கும் என்கிற சுவாரஸ்யமான கதைதான் இந்த படம்.
அதோடு இந்த படத்தில் இளவரசனாக நடித்தவர் டி.ஆர்.ராமச்சந்திரன், அவருக்கு ஒரு மந்திரவாதியின் சாபத்தால் கழுதை காது வந்து விடும். இதனால் ஏற்படும் பிரச்னைகளை வைத்து 'ராஜா காது கழுதை காது' என்ற காமெடி டிராக் உருவாக்கப்பட்டது. இது 'மிடாஸ் மன்னர் மற்றும் அவரது கழுதையின் காதுகள்' என்ற படத்தை தழுவி உருவாக்கப்பட்டது. இது பிரபலமான ஒரு கிரேக்க கதையாகும்.
படத்தில் சிவாஜி கணேசன், டி.ஆர்.ராஜகுமாரி, ஜமுனா, எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, டி.ஆர்.ராமச்சந்திரன், எம்.வி.ராஜம்மா, பி.சரோஜாதேவி, கே.எஸ்.அங்கமுத்து, சி.வி.வி.பந்துலு, கணபதி பட், இந்திரா ஆச்சார்யா, எம்.எஸ்.கருப்பையா, கே.சாரங்கபாணி மற்றும் 'கொட்டாபுலி' ஜெயராமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கன்னட சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.ஜி.லிங்கப்பா இசை அமைத்திருந்தார். படத்தில் பி.சுசீலா பாடிய 'அமுதைப் பொழியும் நிலவே' இன்றைக்கும் நேயர் விருப்ப பாடலாக இருக்கிறது.