பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு
'வீடு மனைவி மக்கள்' படத்தின் வெற்றிக்கு பிறகு டி.பி.கஜேந்திரன் இயக்கிய 2வது படம் 'எங்க ஊரு காவக்காரன்'. கிராமிய பின்னணியில் பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி இருந்தது. இளைராஜா இசையில் அனைத்து பாடல்களுமே ஹிட்டானது. ராமராஜனுடன், கவுதமி, நம்பியார், சங்கிலி முருகன், செந்தில், கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்தனர்.
இந்த படத்தை சங்கிலி முருகன் தயாரித்திருந்தார். படம் முடிந்ததும் விநியோகஸ்தர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. ஆனால் அவர்கள் படம் சரியில்லை என்று கூறிவிட்டு பாதி பேர் படத்தை பார்க்காமலேயே தியேட்டரை விட்டு வெளியில் வந்து பேசிக் கொண்டிருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் சங்கிலி முருகனும், இயக்குனர் டி.பி.கஜேந்திரனும் படம் வெளியீட்டின்போது ஒரு திட்டத்தை அறிவித்தனர்.
படம் ஓடும் தியேட்டர்களில் 3 முதல் பத்து எவர்சில்வர் குடம் வைக்கப்படும், படம் பார்க்க வரும் பெண்கள். டிக்கெட்டில் தங்கள் பெயரை எழுதி ஏதாவது ஒரு குடத்தில் போட வேண்டும். படம் முடிந்ததும், குடம் குலுக்கப்பட்டு அதிலிருந்து ஒரு சீட் எடுக்கப்படும், அது யாருடைய டிக்கெட்டோ அவருக்கு அந்த குடம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தால் பெண்கள் தியேட்டருக்கு திரண்டு வந்தார்கள். படமும், பாடலும் பெண்களுக்கு பிடித்து விடவே படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.