பிளாஷ்பேக்: வாள்வீச்சு நாயகன் ரஞ்சனின் வெள்ளித்திரை வரவுக்கு வித்திட்ட “ரிஷ்யசிருங்கர்”
தமிழ் திரையுலகில் எம் ஜி ஆர் நாயகனாக அறிமுகமாவதற்கு முன், 1940களில் வாள்வீச்சு நாயகனாக தமிழ் திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு திரைக்கலைஞர்தான் நடிகர் ரஞ்சன். வாள்வீச்சில் எந்த அளவிற்கு தேர்ச்சி பெற்றிருந்தாரோ, அதே அளவு நாட்டியத்திலும் சிறப்புமிக்க கலைஞராகவே இருந்து வந்தவர் இவர். மேலும் கோட்டு வாத்தியம், வயலின் உட்பட 10 இசைக்கருவிகளை வாசிக்கவும், மேலைநாட்டு இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்றவராகவும் அறியப்பட்ட இவர், “நாட்டியம்” என்ற பெயரில், பத்திரிகை ஒன்றையும் நடத்தியதன் மூலம் ஒரு பத்திரிகையாளராகவும் பார்க்கப்பட்டவர்.
தனது பட்டப்படிப்பு காலங்களில், கல்லூரியின் ஆண்டுவிழாவின் போது, இவர் ஆடிய ஒரு அற்புதமான நாட்டியத்தைக் கண்டு, ஜெமினி ஸ்டூடியோவில் அப்போது பணிபுரிந்துவந்தவரான வேம்பத்தூர் கிட்டு, எத்தனையோ நடன இயக்குனர்களும், நடிகைகளும் நடனம் ஆடி நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் இவர் போல யாரும் ஆடி நான் பார்த்ததில்லை என நல்ல தாள ஞானத்தோடு ஆடக் கூடிய நடிகர் ரஞ்சனைப் பற்றி, இயக்குநர் ஆச்சார்யாவிடம் சிலாகித்து சொல்லியிருக்கின்றார்.
பின்னர் இயக்குநர் ஆச்சார்யாவின் அனுமதியுடன், ரஞ்சனை சினிமாவில் நடிக்க வைப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்று அவருடைய விருப்பத்தைக் கேட்டிருக்கின்றார் வேம்பத்தூர் கிட்டு. என் பையனை வெளிநாட்டில் படிக்க வைக்கப் போகின்றேன். முதலில் இங்கிருந்து கிளம்புங்கள் என ரஞ்சனின் தந்தை அவரிடம் கறாராக கூறிவிட, அதன் பின்பு ரஞ்சனின் தந்தையிடம் படத்தை எடுக்கப் போகின்ற ராகவாச்சாரி ஒரு வக்கீல், நானும் ஒரு பட்டதாரி, மேலும் எங்க யூனிட்டில் உள்ள அனைவரும் நல்லவர்கள்.
சினிமாவைப் பற்றிய பயமே உங்களுக்கு வேண்டாம் என வேம்பத்தூர் கிட்டு மெதுவாக எடுத்துச் சொல்ல, பின்னர் ரஞ்சனின் தந்தை சம்மதம் தெரிவித்திருக்கின்றார். ஆர் வெங்கடரமண சர்மா என்பதுதான் நடிகர் ரஞ்சனின் இயற்பெயர். எல்லோரும் அவரை செல்லமாக ரமணி என்றும் அழைத்து வந்தனர். ரஞ்சனை வெள்ளித்திரைக்கு ஒரு நடிகனாக அறிமுகப்படுத்திய “ரிஷ்ய சிருங்கர்” திரைப்படத்தின் ஆரம்பகால அழைப்புகளில் கூட, ரமணி பி ஏ என்றுதான் அவரது பெயர் போடப்பட்டிருந்தது.
சினிமாவிற்கு ஒத்துவராத பெயராக இருக்கிறது என எண்ணி, வங்காளத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளரான ஜித்தன் பானர்ஜிதான், வங்காள மண்ணின் மணம் கமழும் பெயர் போல, இவருக்கு ரஞ்சன் என பெயர் சூட்டியிருக்கின்றார். நடிகை வைஜெயந்திமாலாவின் தாயார் வசுந்தராதேவிதான் படத்தின் நாயகி. அவருக்கும் இதுதான் முதல் திரைப்படம். அறிமுக நாயகனாக ரஞ்சனும், நாயகியாக வசுந்தராதேவியும் நடித்து, 1941ம் ஆண்டு வெளிவந்த இந்த “ரிஷ்யசிருங்கர்” திரைப்படம் அவர்களுக்கு உச்சநட்சத்திரம் என்ற அந்தஸ்தையும் பெற்றுத் தந்ததோடு, பெறும் வெற்றித் திரைப்படமாகவும் அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, “மங்கம்மா சபதம்”, “சாலி வாகணன்”, “சந்திரலேகா”, “மின்னல் வீரன்”, “நீலமலைத் திருடன்” ஆகிய திரைப்படங்கள் நடிகர் ரஞ்சனை ஒரு வாள்வீச்சு நாயகனாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததோடு, அவரது பெயருக்கும் கலையுலகப் புகழுக்கும் பெருமை சேர்த்த திரைப்படங்களாகவும் அமைந்திருந்தன.