ஒரே நாள் மோதலில் 'டாக்சிக், துரந்தர் 2'
இந்தியத் திரையுலகத்தில் அடுத்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் படங்களாக கன்னடத்திலிருந்து 'டாக்சிக்', ஹிந்தியிலிருந்து 'துரந்தர் 2' ஆகிய படங்கள் இருக்கின்றன.
இதில் 'டாக்சிக்' படத்தின் வெளியீட்டுத் தேதி என மார்ச் 19ம் தேதியை 2023ம் ஆண்டே அறிவித்துவிட்டார்கள். ஆனால், 'துரந்தர் 2' படத்தின் வெளியீடும் அதே தேதியில் என சமீபத்தில் தான் அறிவித்தார்கள்.
'துரந்தர்' படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளிவந்து 1300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதன் இரண்டாம் பாகமான 'துரந்தர் 2'அதை விட இன்னும் கூடுதலாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். முதல் பாகத்தை ஹிந்தியில் மட்டும் வெளியிட்டார்கள். ஆனால், இரண்டாம் பாகத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வெளியிட உள்ளார்கள்.
'துரந்தர் 2' படத்தை தங்களது 'டாக்சிக்' படத்தின் வெளியீட்டுத் தேதியிலேயே வெளியிட முடிவு செய்துள்ளது 'டாக்சிக்' குழுவினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம். எப்போதோ வெளியீடு அறிவித்த தங்களிடம் இது குறித்து ஆலோசிக்கவேயில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறார்கள்.
இருந்தாலும் 'துரந்தர் 2' படத்திற்காக தங்களது படத்தின் தேதியை மாற்றும் முடிவில் 'டாக்சிக்' குழு இல்லை என்கிறார்கள். தியேட்டர்கள் கிடைப்பதில் இரண்டு படங்களுக்கும் இடையில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது.