ரஜினிகாந்த் எழுதும் சுயசரிதை: விரைவில் புத்தகம் வெளியாகிறது
நடிகர் ரஜினிகாந்த் தனது சுயசரிதையை புத்தகமாக எழுதி வருகிறார். அதை இந்த ஆண்டு புத்தகமாக வெளியிட வாய்ப்பு என்று கூறப்படுகிறது. இது குறித்து ரஜினி நண்பர்கள் கூறுகையில், ''சினிமாவில் 50 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ரஜினிகாந்த், தனது வாழ்க்கையின் முக்கிய நினைவுகளை சுயசரிதையாக எழுதி வருகிறார். இது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு தெரியும். கடந்த சில மாதங்களாக அந்த வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்போது கூட அதற்காகவே பெங்களூருவில் முகாமிட்டு இருக்கிறார்.
அவரின் சுயசரிதை விரைவில் புத்தகமாக வர உள்ளது. இந்த ஆண்டே அதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்த சுயசரிதை சினிமாவாக மாறுமா என்பது இப்போதைக்கு தெரியவில்லை. ரஜினியின் மூத்த மகள் அப்பா வாழ்க்கையை சினிமாவாக எடுக்க நினைக்கிறார். ஒருவேளை வருங்காலத்தில் அது நடக்கலாம். 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் இறுதிகட்டத்தில் இருக்கும் ரஜினிகாந்த், அடுத்து சிபி சக்ரவர்த்தி இயக்கும் படம், அடுத்து நெல்சன் இயக்க கமலுடன் நடிக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் போலீசாக வருகிறார். அவர், ரஜினி, எஸ்.ஜே.சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் விரைவில் எடுக்கப்பட உள்ளன. அத்துடன் ஜெயிலர்2 முடிவடைகிறது'' என்கிறார்கள்.