பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? யாரும் பேச மறுப்பதால் குழப்பம்
இயக்குனர் பாரதிராஜா வயோதிகம் மற்றும் உடல்நல பிரச்னைகளால் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜனவரி மாதம் அவர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. பின்னர், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கே தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை விடப்பட்டது.
பிப்ரவரி இறுதியில் அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக தகவல்கள் வந்தன. ஆனாலும், அவரை யாராலும் சந்திக்க முடியவில்லை. அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவருக்கு ஞாபகசக்தி குறைந்துவிட்டது என கூறப்பட்டது. இந்நிலையில் பாரதிராஜாவுக்கு நெருக்கமானவர்களோ, ''அவர் இன்னமும் ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை அமைந்தகரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். அங்கே மருத்துவ கட்டணம், செலவுகள் அதிகம் என்பதால் அங்கிருந்து கூட்டி வந்து, மீண்டும் சென்னை தி.நகர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த மருத்துவமனை நிர்வாகம் பாரதிராஜாவுக்கு நெருக்கமானது என்பதால் இந்த ஏற்பாடு.
அவர் உடல்நிலையில் பெரியளவில் மாற்றம் இல்லை. செல்களை பாதிக்கும் முக்கியமான பிரச்னையிலும் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் இன்னமும் முழுமையாக மீளவில்லை. உடல்அளவில் நிறைய பாதிப்புகள் இருப்பதால் அவரை சந்திக்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது. பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனை, அவர் உறவினர்கள் தரப்பில் இருந்து எந்த மருத்துவ அறிக்கையும் வராததால், அவர் குறித்த விஷயங்களில் குழப்பமே நிலவுகிறது. சில உண்மை நிலவரத்தை சொல்லி, யாரையும் வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று குடும்பத்தினர் விரும்புவதால் அவருக்கான சிகிச்சை மட்டும் தொடர்கிறது'' என்கிறார்கள்.