உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மம்முட்டி சுரேஷ்கோபி பட தயாரிப்பாளருக்கு நான்கு வருட சிறை ; 67 லட்சம் அபராதம்

மம்முட்டி சுரேஷ்கோபி பட தயாரிப்பாளருக்கு நான்கு வருட சிறை ; 67 லட்சம் அபராதம்


மலையாள திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஜோபி ஜார்ஜ். இவர் மம்முட்டி நடித்த 'ஆபிரகாமின்டே சந்ததிகள், ஷைலாக்', சுரேஷ்கோபி நடித்த 'காவல்' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் தயாரித்த 'வெயில்' படத்தில் கதாநாயகனாக நடித்த ஷேன் நிகம் என்பவருக்கும் இவருக்கும் பிரச்னை ஏற்பட்டு அந்த நடிகருக்கு ரெட் கார்டு போடப்படும் அளவிற்கு சென்றது.

இந்த நிலையில் தற்போது வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கிக் கொண்டு இருவரை ஏமாற்றியதாக இவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் இவருக்கு நீதிமன்றம் நான்கு வருட சிறை தண்டனையும், 66.5 லட்சம் ரூபாய் அபராத தொகையும் விதித்துள்ளது. அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு வருட சிறை தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011ல் கேரளாவில் மூவாட்டுப்புழாவை சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் அவருக்கு லண்டனில் விசா மூலம் வேலை வாங்கித் தருவதுடன் அங்கேயே வியாபார வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் கூறி 50 லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார். ஆனால் சொன்னபடி நடக்காமல் ஏமாற்றியதால் அவர் மீது 2012ல் ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் மூவாட்டுபுழா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதே போல மூலந்துருத்தியை சேர்ந்த இன்னொரு தம்பதியிடம் அவர்களை வெளிநாட்டில் தனது வியாபாரத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி 16 கோடிக்கு மேல் வாங்கியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சமீப வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கில் ஜோபி ஜார்ஜ் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்டு தற்போது அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்த அபராத தொகையில் 50 லட்சத்தை பாதிக்கப்பட்ட ராஜேஷ் என்பவருக்கும் 16.5 லட்சத்தை பாதிக்கப்பட்ட இன்னொரு தம்பதிக்கும் வழங்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !