கடவுள் பெயரில் டைட்டில்கள் : கண்டிப்பு காட்டும் தணிக்கை குழு
இந்து கடவுள்களின் பெயரில் டைட்டில் வைப்பது ஒன்றும் புதிதில்லை. ராஜகாளியம்மன், மூக்குத்தி அம்மன், தேவி கருமாரி, அன்னபூரணி, அகிலாண்டேஸ்வரி, பராசக்தி என ஏராளமான தலைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் சமீகாலமாக சாமி பெயர்களை வைத்து விட்டு, அந்த பெயரில் நடிக்கும் கேரக்டர்கள் நெகட்டிவாக சித்தரிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சாமி பெயர்களின் டைட்டில் மீது தணிக்கை வாரியம் தனி கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.
மலையாளத்தில் வெளிவந்த 'ஜானகி வெசஸ் ஸ்டேட் ஆப் கேரளா' என்ற படத்தின் பெயரில், 'ஜானகி' என்பது கடவுள் சீதா தேவியை குறிப்பது போலிருக்கிறது என்று எதிர்ப்பு கிளம்பியது. இப்படத்தில் 'ஜானகி' என்ற பெயர் கொண்ட ஹீரோயின் கேரக்டர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர். எனவே, படத்தின் பெயர் 'ஜேஎஸ்கே. ஜானகி வெசஸ் ஸ்டேட் ஆப் கேரளா' என்று மாற்றப்பட்டது. ஒரு பெயருக்கு பின்னால் இன்சியல் போடும்போது அது தனிப்பட்ட பெயராகிவிடும் என்பதால் தலைப்பு இப்படி மாற்றப்பட்டது-.
'ஹே பகவான்' என்ற தெலுங்கு படத்தின் தலைப்பு 'ஹே பல்வான்' என்று மாற்றப்பட்டது. வரலட்சுமி சரத்குமார் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகியுள்ள 'சரஸ்வதி' என்ற படத்தின் தலைப்பில், 'சரஸ்வதி' என்பது கடவுள் சரஸ்வதி தேவியை குறிப்பது போலிருக்கிறது என்று தணிக்கை சான்று மறுக்கப்பட்டது. இதனால் படத்தின் தலைப்பு 'எஸ்.சரஸ்வதி' என்று மாற்றப்பட்டது.
தணிக்கை குழுவின் இந்த நடிவடிக்கைகளை சிலர் ஆதரித்தாலும், இது படைப்பு சுதந்திரத்தை பறிக்கிறது என்ற குரல்களும் ஒலிக்கிறது.