பிளாஷ்பேக்': சினிமாவில் ஜெயிக்க முடியாத லட்சிய நடிகரின் மகன்
தமிழ் சினிமாவில் லட்சிய நடிகர் என்று போற்றப்பட்டவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் அவர்களுடன் பயணித்தவர். இருவருடனும் பல படங்களில் இணைந்து நடித்தார். தனியாகவும் நடித்தார். கடைசிவரை புகழ்பெற்ற நடிகராக இருந்தார். பின்னர் எம்ஜிஆரின் அதிமுகவில் இணைந்து சட்டசபை உறுப்பினராகவும் இருந்தார்.
இவரின் மகன்களில் ஒருவரான எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரகுமாரும் தந்தை வழியில் சினிமாவில் நடிக்க 1980களில் வந்தார். 1981ம் ஆண்டு பட்டம் பதவி என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக டி.ராஜேந்தரின் மனைவி உஷா நடித்தார். திருமுருகன் என்பவர் இயக்கினார். எஸ்.எஸ்.ராஜேந்திரனும் இந்த படத்தில் நடித்தார்.
அதன்பிறகு 1988ம் ஆண்டு 'பாய்மரகப்பல்' என்ற படத்தில் நடித்தார். ராதா ராம்திலக் என்பவர் இயக்கினார். இதுதவிர வேறு சில படங்களிலும் நடித்தார். எந்த படங்களும் அவருக்கு வெற்றியை தரவில்லை. இதனால் தந்தை வழியில் அரசியலில் குதித்தார்.