உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : ஹேமமாலினிக்கு செட்ட ஆகாத தமிழ் சினிமா

பிளாஷ்பேக் : ஹேமமாலினிக்கு செட்ட ஆகாத தமிழ் சினிமா

ஒரத்தநாட்டில் பிறந்த அக்மார்க் தமிழச்சி ஹேமமாலினி. தந்தை இன்சூரன்ஸ் கம்பெனி அதிகாரி என்பதால் இந்தியாவின் பல இடங்களில் படித்தார், வாழ்ந்தார். சென்னையில் இருந்தபோது பரதநாட்டியம் கற்றார். நாட்டிய நாடகங்களில் நடித்தார்.

இதை தொடர்ந்து அவருக்கு 1963ம் ஆண்டு ஜி.என்.வேலுமணியின் சரவணா பிக்சர்ஸ் தயாரித்த 'இது சத்தியம்' என்ற படத்தில் நடன மங்கையாக சிறிய கேரக்டரில் நடித்தார். இந்த படத்தில் அசோகன் - சந்திரகாந்தா இணைந்து நடித்தனர். “சிங்கார மனசுக்குத் தேரைக்கட்டி, சின்னச் சின்ன இடையில் பூவைக்கட்டி” என்ற பாடலுக்கு நடனமாடினார்.

இதன்பிறகு, டைரக்டர் ஸ்ரீதர் தன்னுடைய 'வெண்ணிற ஆடை' படத்தில், முற்றிலும் புதுமுகங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்தார் கதாநாயகியாக நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டவர், ஹேமமாலினி. ஒரு பாடல் காட்சி கூட, அவரை வைத்துப் படமாக்கப்பட்டது. அப்போது ஹேமமாலினி மிகவும் ஒல்லியாக இருந்தார். அவர் தோற்றமும், தமிழ் உச்சரிப்பும் ஸ்ரீதருக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே, 'வெண்ணிற ஆடை' கதாநாயகியாக ஹேமமாலினிக்கு பதிலாக ஜெயலலிதா அறிமுகம் ஆனார்.

ஸ்ரீதர் டைரக்ஷனில் அறிமுகமாகலாம் என்று ஆவலோடு இருந்த ஹேமமாலினி ஏமாற்றம் அடைந்தார். மீண்டும் நடனத்தில் கவனம் செலுத்தினார். அவர் நடனத்தைப் பார்த்த பட அதிபர் அனந்தசாமி, இவர் எப்படியும் பெரிய நடிகையாக வருவார் என்பதை கணித்து 3 வருடங்களுக்கு தன் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றும் தன் அனுமதியின்றி வேறு படங்களில் நடிக்கக் கூடாது என்றும் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அனந்தசாமி தயாரித்த 'சப்னோம்கி சவுதகார்' என்ற இந்திப் படத்தில் கதாநாயகியாக ஹேமமாலினி அறிமுகமானார். படத்தின் கதாநாயகன் ராஜ்கபூர். முதல் படம் தோல்விதான். ஆனாலும் ஹேமமாலினியை ரசிகர்கள் ரசித்தார்கள்.

இதன் பின், தேவ் ஆனந்த்துடன், 'ஜானி மேரா நாம்' என்ற படத்தில் நடித்தார். படம் பெரிய ஹிட். இதன் பிறகு 'அந்தாஸ்' என்ற படத்தில் 'ராஜேஷ்கன்னா, ஷம்மி கபூர் ஆகியோருடன் நடித்தார். 1975ல் வெளிவந்த 'ஷோலே'யில் ஹேமமாலினி, தர்மேந்திரா, சஞ்சீவ்குமார், அமிதாப்பச்சன், அம்ஜத்கான், ரஜயபாதுரி ஆகியோர் நடித்தனர். படம் மகத்தான வெற்றி பெற்றது. மும்பையில், ஒரே தியேட்டரில் தொடர்ந்து ஐந்தாண்டுகள் ஓடி, சாதனை புரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !