ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை
தமிழில் தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' படத்தில் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதன்பிறகு 'வேலாயுதம், சிங்கம்- 2, மான்கராத்தே, வாலு' என பல படங்களில் நடித்தார். சிம்புவுடன் வாலு படத்தில் நடித்து வந்தபோது அவர்கள் இருவரும் காதலித்த நிலையில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டார்கள். ஆனால், கடைசி நேரத்தில் அந்த திருமணம் தடைபட்டது.
இந்த நிலையில் 2022ம் ஆண்டில் தனது தோழியை திருமணம் செய்து கொண்டு விவாகரத்தான சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஹன்சிகா. ஆனால் திருமணமாகி 3 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சோஹைல் கத்தூரியாவை ஹன்சிகா பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியானது. இதனை சோஹைல் மறுத்திருந்தார்.
இதற்கிடையே சோஹைல் உடன் இருந்த திருமண போட்டோ மற்றும் இருவரும் ஜோடியாக இருந்த போட்டோக்கள் அனைத்தையும் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கினார் ஹன்சிகா. மேலும் அவரை அன்பாலோவும் செய்தார். இதனால் இருவரின் உறவில் விரிசல் ஏற்பட்டது உறுதியானது. இந்த நிலையில், மும்பை பாந்த்ரா குடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரினர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது. மேலும், தனது விவாகரத்து மனுவில், ஜீவனாம்சம் வேண்டாம் என ஹன்சிகா குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், நீதிமன்றம் ஜீவனாம்சம் குறித்து தீர்ப்பில் குறிப்பிடாமல் விவகாரத்து மட்டும் வழங்கியுள்ளது.