நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசரும், பொதுச் செயலாளராக விஷாலும், துணை தலைவர்களாக பூச்சி முருகன் மற்றும் கருணாசும், பொருளாளராக கார்த்தியும் இருந்து வருகிறார்கள். இவர்களின் பதவி காலம் கடந்த ஆண்டு மார்ச் மாதமே முடிவடைந்து விட்டது. புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் சங்க கட்டிட பணிகள் முடிவடையாததை காரணம் காட்டி மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை செல்லாது என்று அறிவிக்கக் கோரியும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டுமென்றும், அதுவரை தற்போதைய நிர்வாக குழு மற்றும் செயற்குழு ஆகியவை முடிவுகள் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் சங்கத்தின் உறுப்பினர் நம்பிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சங்க நிர்வாகிகளின் பதவிகாலத்தை மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கில் நடிகர் சங்கம் தரப்பில் எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையை மார்ச் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தது.