உங்கள் படங்களில் இன்டர்நேஷனல் டச் இருக்கிறது : மலையாள இயக்குனரை பாராட்டிய பிரபாஸ்
மலையாளத்தில் கடந்த 2024 ல் ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி நடிப்பில் கிஷ்கிந்தா காண்டம் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் கதையும் அது சொல்லப்பட்ட விதமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. டிஞ்சித் அய்யத்தன் என்பவர் இயக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது இயக்கத்தில் எக்கோ என்கிற திரைப்படம் வெளியானது. தன் முதலாளிக்கு அவர்கள் வளர்க்கும் நாய்கள் எந்த அளவிற்கு விசுவாசமாக இருக்கின்றன என்பதை மையப்படுத்தி ஒரு திரில்லர் படமாக இது வெளியாகியிருந்தது. இந்த படமும் அதன் வித்தியாசமான கதை மற்றும் அது சொல்லப்பட்ட விதத்தில் பாராட்டுகளை பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் பிரபாஸை இயக்குனர் டிஞ்சித் அய்யத்தன் சந்தித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது. தற்போது பிரபாஸ் கிஷ்கிந்தா காண்டம் படத்தை பார்த்துவிட்டு, “அற்புதமான கிளைமாக்ஸ்.. நான் ரொம்பவே ரசித்தேன்.. உங்களது படங்களில் எல்லாம் ஒரு இன்டர்நேஷனல் டச் இருக்கிறது” என்று பாராட்டியுள்ளார்.
இது குறித்த வாட்ஸ் அப் உரையாடல் ஸ்க்ரீன்ஷாட்டை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் டிஞ்சித் அய்யத்தன். அந்த வகையில் தனது புதிய படம் ஒன்றுக்கு இயக்குனர் டிஞ்சித் அய்யத்தனை கதை மற்றும் திரைக்கதை எழுதுவதற்காக பிரபாஸ் ஒப்பந்தம் செய்ய இருக்கிறார் என்றும் மலையாள திரை உலகில் ஒரு பேச்சு நிலவுகிறது.