மக்களின் வாழ்வியல் பிரச்னைகளை பேசும் படங்கள் : யோகிபாபு ஆசை
யோகிபாபு, லவ்லின் நடித்த கெணத்த காணோம் பட நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. அதில் பேசிய யோகிபாபு. “இந்தப் படம் பரவலான ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்று இயக்குநர் சுரேஷ் சங்கையா கனவு கண்டார்; அந்தக் கனவு இன்று நனவாகியுள்ளது. தியேட்டரில் இந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ரசிகர்களிடம் இருந்து மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், மீடியாதான். ஒரு படத்தின் இயக்குநர் உடன் இருந்து வழிநடத்த முடியாத நிலையிலும், அப்படம் வெளியாகி பாராட்டத்தக்க வகையில் மக்களை சென்றடைகிறது என்றால், அது பெரிய விஷயம்.
வழக்கமான நகைச்சுவை வேடங்களைத் தாண்டி, புதுமையான மற்றும் பரிசோதனை முயற்சிகளில் ஆன கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க, பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி வந்துள்ளனர். அத்தகைய ஊக்கத்தால்தான், என்னால் இத்தனை மாறுபட்ட மற்றும் அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்க முடிகிறது. காமெடி கேரக்டர் மட்டுமல்ல, சாமானிய மக்களின் வாழ்க்கை மற்றும் போராட்டங்ள், பிரச்னைகளை பிரதிபலிக்கும் வகையிலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, நான் தொடர்ந்து நடிப்பேன்.
இந்த படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா படம் வெளியாகும் முன்பே இறந்துவிட்டார். சுரேஷ் சங்கையா இன்று நம்முடன் இல்லாததை நினைக்கும்போது, ஒருவித இழப்பு உணர்வும் துக்கமும் என் நெஞ்சில் இழையோடுகிறது. இங்கு பேசிய மற்றவர்கள் குறிப்பிட்டது போலவே, சுரேஷ் சங்கையா குடும்பத்தினருக்கு, நம்மால் இயன்ற வகையில் அனைவரும் உதவ வேண்டும் என்று நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
பல படங்களில் பிஸியாக இருக்கும் யோகிபாபு தான் நடிக்கும் படநிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ளவில்லை. ஆனால், இந்த படத்தின் பிரஸ்மீட், பிரிமியர் ஷோ, நன்றி அறிவிப்பு விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.