மார்ச் 27ல் 3 படங்கள் ரிலீஸ்
2026ம் ஆண்டின் மூன்றாவது மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. கடந்த வாரம் மார்ச் 19ம் தேதி 'யூத்' படம் மட்டுமே வெளிவந்தது. இந்த வார வெள்ளிக்கிழமை மார்ச் 27ம் தேதி ஜிவி பிரகாஷ்குமார் நாயகனாக நடித்துள்ள 'ஹேப்பி ராஜ்', மற்றும் 'காணாத சுடர், தி டார்க் சாத்தான்' ஆகிய மூன்று படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்களுடன் இந்த வருடத்தில் வெளியான படங்களின் எண்ணிக்கை 65ஐக் கடந்துவிடும்.
அடுத்த மாதம் ஏப்ரல் 3ம் தேதி நான்கைந்து படங்களின் வெளியீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கடுத்த வாரங்களிலும் வெளியாக உள்ள சில படங்களின் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. தேர்தல் நேரம் என்றாலும், விரைவில் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்க உள்ளன என்றாலும் கிடைக்கும் இடைவெளியில் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த வாரம் வெளிவந்த 'யூத்' படத்திற்கு இளம் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதால் அந்தப் படம் வசூல் ரீதியாக தப்பிக்கும் என்கிறார்கள். வரும் வாரங்களிலும் சிறிய படங்கள் வெற்றி பெற்றால் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் லாபத்தைக் கொடுக்கும் என்பதுதான் வியாபார வட்டாரங்களில் நம்பிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.