உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிக்க மறுத்த கேரக்டரில் நடித்த சிவாஜி

பிளாஷ்பேக் : எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிக்க மறுத்த கேரக்டரில் நடித்த சிவாஜி

இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம் தமிழில் பல திரைப்படங்களாக உருவாகி உள்ளது. அதிக தொழில்நுட்பம் வளராத காலத்தில் அதாவது 1930களில் கூட ராமாயணம் திரைப்படமாகி உள்ளது. என்றாலும் ஒரு பக்காவன கமர்ஷியல் படமாக, தொழில்நுட்ப நேர்த்தியுடன் வெளியான முதல் படம் 1958ம் ஆண்டு வெளியானது. படத்தின் பெயர் சம்பூர்ண ராமாயணம். இதனை அப்போதைய பெரிய தயாரிப்பாளர் எம்.ஏ.வேணு பெரிய பட்ஜெட்டில் தயாரித்தார்.

இதில் ராமராக என்.டி.ராமராவ், சீதையாக பத்மினி, லட்சுமணனாக நரசிம்ம பாரதி, ஹனுமனாக சாண்டோ கிருஷ்ணன், ராவணனாக டி.கே.பகவதி, தசரதனாக வி.நாகய்யா, கைகேயியாக ஜி.வரலட்சுமி நடித்தார்கள்.கே.சோமு இயக்கினார்.

இந்த படம் பரதனின் பார்வையில் இருந்து கதை சொல்லப்பட்டது. இதனால் படத்தின் நாயகன் என்றால் அது பரதன்தான். இந்த கேரக்டரில் நடிக்க முதலில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் அப்போது திமுகவில் இருந்ததால் திராவிட இயக்கத்தில் இருப்பவர் புராண படத்தில் நடிக்க கூடாது என்று கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் எஸ்.எஸ்.ராஜேந்திரன் படத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்ட நிலையில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் விலகியதால் கடும் பாதிப்புக்கு உள்ளானார் தயாரிப்பாளர் வேணு. அவர் சிவாஜியிடம் சென்று முறையிட்டார். அவரை தேற்றிய சிவாஜி, தானே அந்த கேரக்டரில் நடித்து தருவதாக வாக்குறுதி கொடுத்தார். படம் தயாராகி வெளியானதும், மற்ற கேரக்டர்களை விட சிவாஜி நடித்த பரதன் கேரக்டரே அதிகம் பேசப்பட்டது. எழுத்தாளர் கல்கி, சிவாஜியை நேரில் சென்று பார்த்து பாராட்டினார். 'இந்த படம் ராமாயணம் அல்ல பரதாயணம்' என்று என்.டி.ராமராவ் பாராட்டினார். படம் வெள்ளி விழா கொண்டாடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !