தயாரிப்பாளருக்கு 4.25 கோடி வழங்க வேண்டும்: கவுதம் மேனனுக்கு கோர்ட் உத்தரவு
விண்ணைத் தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள் படங்களை தயாரித்தவர் எல்ரெட் குமார். இவரின் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சிம்பு நடிப்பில் ஒரு படம் இயக்கி தருவதற்காக கவுதம் மேனனுக்கு 4 கோடியே 25 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் கவுதம் மேனன் படம் எதையும் இயக்கித் தரவில்லை. இதுதொடர்பாக 2008ல் ஒப்பந்தம் போடப்பட்டது.
'இந்த ஒப்பந்தத்தின்படி இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நடந்து கொள்ளவில்லை. அவர் எனக்கு எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. இதையடுத்து, கொடுத்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று கேட்டபோது இயக்குனர் கவுதம் மேனன் பணத்தை வழங்கவில்லை. படத்தையும் இயக்கவில்லை. எனவே, நான் கொடுத்த தொகையை திருப்பி தருமாறு உத்தரவிட வேண்டும்' என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 4 கோடியே 25 லட்சத்தை மனுதாரர் எல்ரெட் குமாருக்கு வழங்குமாறு கவுதம் வாசுதேவ் மேனனுக்கு உத்தரவிட்டது. தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இயக்குனர் கவுதம் மேனன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு விசாரணையின் முடிவில் கவுதம் மேனனின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும். அந்த உத்தரவின்படி பட தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு 4 கோடியே 25 லட்சம் ரூபாயை கவுதம் வாசுதேவ் மேனன் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.