மீண்டும் 'ஹிட்' அடித்த ரஜினிகாந்த் பதிவு
ஒரு வார இடைவெளியில் சமூக வலைத்தளத்தில் தனது இரண்டு பதிவுகளால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த். ஒரு பதிவு அரசியல் பதிவு, மற்றொரு பதிவு சினிமா பதிவு.
கடந்த வாரம் மார்ச் 17ம் தேதி தவெக கட்சியின் ஆதவ் அர்ஜுனாவிற்குக் கண்டனம் தெரிவித்த மற்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவு எக்ஸ் தளத்தில் 10 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. அடிக்கடி சமூக வலைத்தளம் பக்கம் வராதவர் ரஜினிகாந்த். ஆனால், அவர் எப்போது பதிவு போட்டாலும் அது பரபரப்பை ஏற்படுத்திவிடும்.
இரு தினங்களுக்கு முன்பு மார்ச் 23ம் தேதி 'துரந்தர் 2' படத்தைப் பாராட்டி ஒரு பதிவு போட்டிருந்தார். அந்தப் பதிவு தற்போது 8 மில்லியன் பார்வைகளை நெருங்கி வருகிறது.
இரண்டு பதிவுகளுக்கும் கமெண்ட்டுகள், மறுபதிவுகள், லைக்குகள் என ஆயிரக்கணக்கில் வந்துள்ளது. ரஜினி நடிக்கும் படங்கள் வரும் போது மட்டும் அவர் பரபரப்பை ஏற்படுத்துவதில்லை. அவரது சில வரி பதிவுகள் கூட பரபரப்பை ஏற்படுத்தும் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.