எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், ஆந்திர மாநிலத்தில் துணை முதல்வருமான பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஹ்னேவா சமீபத்தில் தான் இன்ஸ்டாகிராமில் தனது கணக்கை துவங்கியுள்ளார். இதனை தொடர்ந்து தங்களது குடும்ப புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். நடிகர் பவன் கல்யாண் தனது முதல் மனைவியான நந்தினியை 2008ல் விவாகரத்து செய்தார். அதன்பிறகு நடிகை ரேணு தேசாய் என்பவரை 2009ல் திருமணம் செய்து 2012ல் விவாகரத்து செய்தார். அதன்பிறகு தற்போதைய மனைவியான அன்னாவை கடந்த 2013ல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அன்னா தனது சோசியல் மீடியாவில் பவன் கல்யாணின் சகோதரர்களான சிரஞ்சீவி மற்றும் நாகேந்திர பாபு ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..
அதில், “கிட்டத்தட்ட ஒருவருக்கொருவர் ஏற்கனவே நெருக்கமான ஒரு குடும்பத்திற்குள் 15 வருடங்களுக்கு முன்பு அடி எடுத்து வைத்தேன். அந்த குடும்பத்தில் எப்படி என்னை பொருத்திக் கொள்வது என எனக்கு தெரியவில்லை. யாரை எப்படி அழைப்பது என்றும் தெரியவில்லை. அதனால் என் கணவரிடம் இருந்து வார்த்தைகளை கடன் வாங்கி சிரஞ்சீவியை அன்னையா என்றும், நாகபாபுவை சின்ன அன்னையா என்றும் அழைக்க ஆரம்பித்தேன்.
ஆரம்பத்தில் மரியாதை நிமித்தமாக அப்படி அழைத்தாலும் போகப்போக அப்படி அழைப்பதை உணர்வுபூர்வமாக உணர்ந்தேன். அதன்பிறகு தான் அவர்களை வேறுவிதமான வார்த்தைகளில் அழைக்கலாம் என்றாலும் கூட எனக்கு இப்படி அழைப்பது தான் பிடித்திருக்கிறது. காரணம் எனக்கு உடன்பிறந்த சகோதரர் யாரும் இல்லை. ஆனால் வாழ்க்கை எனக்கு அப்படி அற்புதமான இரண்டு பேரை கொடுத்து இருக்கிறது” என்று கூறியுள்ளார்.