அமெரிக்கா வசூல் : 9 வருட சாதனையை முறியடித்த 'துரந்தர் 2'
இந்தியாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் வெளியாகும் இந்தியத் திரைப்படங்களின் முக்கிய வசூல் மையமாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரையில் வெளியான இந்தியத் திரைப்படங்களில் 2017ல் வெளியான 'பாகுபலி 2' திரைப்படம், 22 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்ததுதான் சாதனையாக இருந்து வந்தது.
அந்த சாதனையை தற்போது 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் முறியடித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஏழு வருடங்களாக 'பாகுபலி 2' வசம் இருந்த சாதனையை இப்படம் தற்போது கைப்பற்றி இருக்கிறது. மேலும், 10 நாட்களுக்குள் இந்த சாதனை நிகழ்ந்திருப்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டு தினங்களுக்கு முந்தைய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி இந்தியாவில் 814 கோடியும், வெளிநாடுகளில் 274 கோடியும் என மொத்தமாக 1088 கோடியை வசூலித்துள்ளது.
'பாகுபலி 2' படத்தின் தயாரிப்பாளரான ஷோபு யர்லகட்டா, “நேற்று நான் 'துரந்தர் 2' படத்தைப் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது, படத்தை நான் முழுமையாக ரசித்தேன் என்பதை சொல்லத் தேவையில்லை. இத்திரைப்படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து, இந்தியாவிலும் உலக அளவிலும் புதிய பாக்ஸ் ஆபீஸ் மைல்கற்களைப் படைத்து வருவதைக் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.